திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூரில் அமைந்துள்ளது இந்தப் பேருந்து நிழற்குடை.
இது சுமார் 1.5 லட்சம் மதிப்பில் 10 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது என்கிறார்கள். இந்தப் பேருந்து நிழற்குடையைப் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயணம் மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது சில வருடங்களாக ஒதுங்கக்கூட முடியாத அளவுக்குத் தூய்மையற்று சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. மேலும் மதுபாட்டில்களும், விளம்பரங்கள் ஒட்டும் இடமாக மாறி இரவு நேரங்களில் திறந்த வெளி பாராக மாறி வருகிறது என்கின்றனர் பொதுமக்கள். இவ்விடத்தில் பயணிகள் நிற்கக்கூட முடியாத அளவுக்குத் தூய்மையற்ற நிலையும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி அங்கு நிற்கும் பயணிகளிடம் விசாரித்தபோது, “ஆமாம், தினமும் இங்குதான் பேருந்து ஏறுகிறோம். ஆனால் ஒருநாளும் இவ்விடத்தில் நிற்க மாட்டோம். இந்த நிழற்குடை சில வருடங்களாகவே மோசமான நிலையில்தான் உள்ளது. மேலும், சமூக விரோதிகள் இவ்விடத்தை அசுத்தம் படுத்துகிறார்கள். இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை இங்கே உடைத்துச் சென்று விடுகின்றனர். இதே இடத்திலேயே குப்பைகளையும் எரித்து விடுகின்றனர்.
மழைக்காலங்களில் சுவரின் மேல் தண்ணீர் தேங்கி ஒழுகுகிறது. அண்மையில் இந்த நிழற்குடையின் சுவர் இடிந்து விழுந்து, நூலிழையில் பெண்மணி ஒருவர் உயிர்த் தப்பினார். சில நேரங்களில் நிழலுக்காக மரத்தடியில் நிற்கும்போது, நாங்கள் வருவதற்குள் பேருந்து சென்று விடுகின்றது.” என்றனர்
வருவது மழைக்காலம்… பேருந்துக்குக் காத்திருக்கும் பயணிகள் அச்சம்போக்க, சிதிலமடைந்து கிடக்கும் இந்த நிழற்குடையை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!