உணவு என்பது அனைவருக்குமான அடிப்படைத் தேவை. சாதாரண குடும்பங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை உணவுக்குத்தான் செலவிடுகின்றன. புள்ளிவிவரங்களின்படி, 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, இந்தியக் குடும்பங்கள் மொத்த செலவில் பாதி தொகையை உணவுக்குத்தான் செலவு செய்து வந்துள்ளன.
ஆனால், சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாற்றில் முதல்முறையாக, இந்தியக் குடும்பங்கள் மொத்த செலவில் பாதிக்கும் குறைவான தொகையை உணவுக்கு செலவிட்டுள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், இந்திய மக்களின் உணவு நுகரும் வழக்கத்திலேயே மாற்றங்கள் வந்திருப்பதாகவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடும்பங்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகை கணிசமாகக் குறைந்திருக்கிறது. கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் இதே நிலைதான்.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில், “நவீன இந்தியாவில் (சுதந்திரத்துக்குப் பின்) முதல்முறையாக குடும்பங்களின் ஒட்டுமொத்த மாதாந்திர செலவில் பாதிக்கு கீழே உணவுக்கு செலவு செய்கின்றனர். ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் குடும்பங்களின் சராசரி தனிநபர் மாதாந்திர செலவு அதிகரித்துள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் வளர்ச்சியில் வேறுபாடு இருக்கிறது.
உதாரணமாக, 2011-12 ஆண்டு முதல் 2022-23 ஆண்டு வரை கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால், மேற்கு வங்க குடும்பங்களின் செலவு 151 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலோ 214 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சிக்கீம் மாநிலத்தில் 394 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே நகரங்களை விட கிராமப்புறங்களில் செலவு வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.
உணவுப் பொருள்களிலும் பிரித்துப் பார்த்தால், தானியங்களுக்கு மக்கள் செலவு செய்வது கணிசமாக குறைந்துள்ளது. மக்களுக்கு ரேஷன் வழியில் உணவுப் பொருள்களை வழங்குவதே இந்த மாற்றத்துக்கான காரணம் என்கிறது பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில்.
இதுபோக, பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை மக்கள் நுகருவதும் அதிகரித்திருப்பதாக இந்த ரிப்போர்ட் கூறுகிறது. உணவுப் பதப்படுத்துதல் துறை நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சிக்கான துறையாக இருக்கிறது. ஆனால், இந்த உணவுகளை நுகருவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என்பதையும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.