தமிழ்நாடு அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டிருப்பதும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை தரப்பட்டதும், பள்ளிகளில் போலி என்சிசி கேம்ப் நடப்பதென பல்வேறு சர்ச்சைகள் கல்வித்துறை அமைச்சகத்தின் முன் நிற்கிறது. இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.
திருச்சி, புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு `சுற்றுசூழலுக்கு பாதுகாப்பான விநாயகர் விழா கொண்டாடுதல்’ என்ற சுற்றிறக்கை அனுப்பியது சர்ச்சையாகிய பின்னர் விளக்கமளித்தது அறிக்கையை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு.
இவ்விவகாரம் ஓய்வதற்குள் சென்னை அசோக் நகரிலுள்ள அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளரை விருந்தினராக அழைத்த விவகாரம் வெடித்திருக்கிறது. அழைப்பாளராக வந்த நபர் அறிவியலுக்கு எதிராகவும், மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகவும், மாற்றுதிறனாளி ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்ததும் பெரும் பிரச்னையாகியிருக்கிறது.
விவகாரம் பூதாகரமாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கே நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். தலைமை ஆசிரியரை இட மாறுதல் செய்திருப்பதோடு 4 நாள்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்திருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
நம்மிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள் “மதசார்பின்மை அரசாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தி.மு.க, முன்பிறவி குறித்து ஆன்மிக சொற்பொழிவும் மதச்சார்பின்மைக்கு விரோதமானதுதாக பேசுவோரை அரசுப் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டது எப்படி? ஏற்கனவே போலி என்சிசி ஆசிரியர் சிவராமன் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை சர்ச்சைக்கு பிறகும்கூட யாரை அனுமதிக்க வேண்டும் என்ற புரிதல் பள்ளிக் கல்வித்துறைக்கு வரவில்லையா? விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை யாருடைய உத்தரவில் அனுப்பபடுகிறது? ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கையை மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்கிறதென்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கும்போது இதுபோன்ற சொற்பொழிகள் நடப்பதற்கெல்லாம் அமைச்சர்தான் பொறுப்பேற்ற வேண்டும்” என்றனர் ஆதங்கத்துடன்.
தொடர்ந்து பேசும்போது “யாரையெல்லாம் அரசுப் பள்ளி விருந்தினராக அழைக்கலாம் என்ற புரிதல் தலைமை ஆசிரியர்களுக்கு இல்லை” என்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆளூர ஷாநவாஸ் “பாஜக ஆளும் மாநிலங்களில் தப்பித் தவறி கூட கல்விக் கூடங்களில் சமத்துவ சமூகநீதி கருத்துகளை பேசிவிட முடியுமா? நம் கருத்தாளர்களால் அங்கு நுழையத்தான் முடியுமா? தமிழ்நாட்டின் அரசியலையே கல்வி தான் தீர்மானிக்கிறது. அதில் RSS கருத்தியல் நுழையும் எனில், எல்லாம் பாழ்” என்றிருக்கிறார் காட்டமாக.
நாம் தமிழர் கட்சியின் தமிழ்மீட்சிப் பாசறை கார்த்திச்செல்வன் “சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரே மாவட்ட அளவிலான அதிகாரிகள் சொல்லித்தான் நிகழ்ச்சி நடத்தியதாக பேட்டி கொடுக்கிறார். அந்த ஆன்மீக சொற்பொழிவாளர் அமைச்சருடன் இருப்பதுபோலான படங்களும் வெளியாகியுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் என்றால் அமைச்சருக்கு இதில் எதோ பங்கு இருப்பதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் தி.மு.க-வினரின் இயல்பே ஒரு பிரச்னையை அதிகார மட்டத்தில் நிறுத்திவிடுகிறார்கள். இரண்டு தலைமை ஆசிரியர்களை இடமாறுதல் செய்ததுதான் தீர்வா?
சரி இந்தவொரு விவகாரத்தில்தான் தி.மு.க அரசு தவறிழைத்துவிட்டதா.. எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி என தேசிய கல்விக் கொள்கை தழுவியே மாநில கல்விக் கொள்கை கட்டமைக்கப் படுகிறது எனப் பேராசிரியர் ஜவகர் நேசன் குற்றம்சாட்டியது தொடங்கி அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் என பா.ஜ.க-வின் கொள்கைகளை அமல்படுத்துவதிலேயே மும்முரம் காட்டுகிறார்கள். இவற்றுக்கு மேலாக `நான் பெருமைமிகு சாய் பக்தர்’ எனப்பேசிய அமைச்சர் அன்பில் மகேஷிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” என்றார்.
தி.மு.க செய்தி தொடர்பாளர்களிடம் விளக்கம்கேட்டபோது “இந்த விவகாரத்தை வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசையும் கல்வித்துறை அமைச்சகத்தையும் கேள்விக்குள்ளாக்குவது அரசியல் காழ்புணர்ச்சி. இது தவறல்ல என சமாளிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பதோடு, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அரசு ஆயத்தமாகியுள்ளது. மாற்றுதிறனாளி ஆசிரியரை அவதூறாக பேசிய அந்த நபரை சும்மா விட மாட்டேன் என்றிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். எனவே இனிமேல் இதுபோன்ற சர்ச்சைகள் நடைபெறாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும்” என்றனர்