கோவை, ஈஷா யோகா மையம் சார்பில் அவுட்ரீச் (Isha Outreach) செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் மருத்துவக் குழு இயங்கி வருகிறது. இதில் உள்ள மருத்துவக் குழு சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இந்தக் குழுவில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணமூர்த்தி என்ற மருத்துவர் பணியாற்றி வருகிறார்.
அவர் தொடர்ச்சியாக இந்த மருத்துவ முகாம்களில் பங்கேற்று வந்தார். அப்போது அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சரவணமூர்த்தி மீது புகார் எழுந்துள்ளது.
ஆலாந்துறை அருகே ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நல அதிகாரிகள் மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில்தான், மருத்துவர் சரவணமூர்த்தி 12 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
மாணவிகள் அளத்த தகவலின் அடிப்படையில், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சரவணமூர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், சரவணமூர்த்தி மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தாமல், மாணவிகளை தவறான நோக்கத்தில் நேரடியாக தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஈஷாவின் உறுதியான நிலைப்பாடு. இந்த வழக்கில் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.” என்று கூறியுள்ளனர்.