தஞ்சாவூர் மகர்நோம்பு சாவடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ இரட்டை விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகர், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடமுழுக்கு முடிந்த பிறகு ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்து கோயிலுக்கு அருகிலேயே சர்ச், மசூதி உள்ளது. மூன்று மதமும் ஒண்ணாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக இந்த கோயில்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. மூணு மதமும் சங்கமிக்கிற இடமாக இந்த இடம் உள்ளது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தான் இப்படி இருக்குமுனு நினைக்கிறேன்.
சட்டம் தெரிய வேண்டும் என அவசியமில்லை., மக்களை நேசிக்கும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் விதிவிலக்கல்ல. மக்கள் சினிமாவை பார்க்க அந்த படத்தின் இயக்குநர், நடிகர் மீது உள்ள அபிமானத்தில் தியேட்டருக்கு வருவார்கள். சினிமா நல்லா இருந்தால், அந்த சினிமா ஹிட்டாகும். இல்லை என்றால் சினிமா என்ன தான் பெரிய நடிகர் நடித்திருந்தாலும் ப்ளாப் ஆகும். அரசியலில் எல்லோரையும் விட மிகவும் புத்திசாலி மக்கள் தான். மக்கள் மிக சரியாக முடிவு எடுப்பார்கள்.
விஜய் வந்த பிறகு அவர் பாலிஸி என்ன? மக்கள் போராட்டங்களை எப்படி முன்னெடுக்கிறார்? என்பதை பார்ப்பார்கள். மக்கள் சினிமாவில் அவரை நம்பியது போல, அரசியலிலும் அவரை மக்கள் நம்புவதற்கான அனைத்து தகுதிகளையும் வளர்த்துக் கொண்டால் விஜய் அரசியலில் தனக்கான இடத்தை பிடிக்கலாம். தமிழ் சினிமாத்துறையில் ஒரு முறையான வடிவம் இல்லாமல் உள்ளது. முதலில் ரூ. 100 முதல் 500 கோடி வரை தான் ஒரு ஆண்டின் மொத்த சினிமாத்துறையின் வருமானமாக இருந்தது. ஆனால் இன்று ஒரு சினிமாவின் வருமானமே ரூ. 500 கோடி என்கிற உயர்ந்த அளவுக்கு தமிழ்த்திரை துறை உள்ளது.
ஆனால் விவசாயிகளுக்கு நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அது போல முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாத்துறையில் திறமை இருந்தால், எந்த மொழிக்காரர்களும் வரலாம். கேளராவில் கூறுவது போல் பாலியல் குற்றச்சாட்டுகள் தமிழ் சினிமாத்துறையில் இல்லை. வெளிநாட்டில் உள்ள சாப்ட்வேரை திருட்டுத்தனமாகப் பயன்படுத்தினால் போலீஸார் கைது செய்கிறார்கள். வெளிநாட்டினருக்குப் பாதுகாப்பு அளிக்கும் போலீஸார் என்னுடைய வீட்டில் திருட்டுப் போகும் போது கண்டுக்கொள்ளுவதில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகும் திரைப்படங்களை தடுத்து எங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.