“விஜய் உஷாரா இருக்கணும், இனிமேல் தான் சோதனை வரும்” சொல்கிறார் இயக்குநர் பேரரசு!

தஞ்சாவூரில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழா ஒன்றில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகர், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் பேரரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சினிமாவில் கூறப்படும் பாலியல் குற்றங்கள் உண்மையாக இருந்தால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவர்களை திரைத்துறையிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் யாராக இருந்தாலும் தடை விதிக்க வேண்டும்.

பேரரசு

நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அடுத்தது தவறு செய்ய பயப்படுவார்கள். இது போன்ற பாலியல் குற்றங்களுக்கு காவல் துறையோ, நீதிமன்றமோ தண்டனை வழங்கிட முடியாது. ஏன் என்றால் இது போன்ற புகார்களுக்கு ஆதாரம் இருக்காது. எனவே சங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும். பத்து வருடத்திற்கு முன்பு எட்டு வருடத்திற்கு முன்பு நடந்தது என்று புகார் தெரிவித்தால் கதை போல் ஆகிவிடும். நடிகைகளுக்கு மட்டும் இல்லை தமிழகத்தில் உள்ள எந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை நடந்தாலும் நடிகர் – நடிகைகள் குரல் கொடுக்க வேண்டும்.

விஜய் அரசியலில் குதித்து விட்டார்…

விஜய் அரசியலில் குதித்து விட்டார். இனிமேல் தான் விஜய் சாருக்கு சோதனை வரும். அவர் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு நிறைய அரசியல்வாதிகள் வேலை செய்வார்கள். இனி அவர் உஷாரா இருக்க வேண்டும். உங்கள் திறமை இனிமேல் தான் நிரூபிக்கப்படணும்.

விஜய்

அரசியலில் குதிப்பதற்கு சினிமா புகழ் அஸ்திவாரம். அவருக்கு கோடிகணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர் பொதுமக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். ஆட்சியாளர்கள் தவறு செய்தால் துணிந்து தட்டி கேட்கிறீர்களா என மக்கள் கவனிப்பார்கள். அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. சீமான், அண்ணாமலை போன்றவர்கள் மக்களை சந்தித்து பேசி வாக்கு வாங்கியை அதிகரித்துள்ளனர். விஜய் சாருக்கு அப்படி இல்லை ஒரு அறிக்கை போதும் 10 சதவீதம் வாக்கு வங்கி கிடைத்திடும். சீமான், அண்ணாமலை போன்றவர்கள் கஷ்டப்பட்டு பத்து வருடங்களாக வளர்த்ததை பத்து மாதங்களிலேயே விஜய் பெற்று விட்டார். ஆட்சி அமைப்பதற்கு இது பத்தாது மக்கள் நம்பிக்கையை பெற வேண்டும் என்றார்.