தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்த வேண்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பியிடம் மனு ஒன்றை அளித்திருந்தார். பதிலுக்கு 21 கேள்விகளைக் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த கேள்விகளுக்கு இப்போது த.வெ.க சார்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் திருச்சி அதைத் தொடர்ந்து சேலம், ஈரோடு என பல இடங்களில் மாநாடு நடத்த இடம் தேடினர் விஜய் தரப்பு. எல்லா பக்கமும் எதோ ஒரு பிரச்னை ஏற்பட, கடைசியாகத்தான் விக்கிரவாண்டியை லாக் செய்தார்கள். விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கிட்டத்தட்ட 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார்கள். அதற்காகத்தான் கடந்த 28-ம் தேதி த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி-யிடம் மனு கொடுத்தார்கள்.
மனுவில் மாநாடு நடத்தப்போகும் தேதி மற்றும் ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்கிற தகவல் மட்டுமே இருந்தது. கூடுதலாக எங்கெல்லாம் பார்க்கிங் வசதி செய்திருந்தார்கள் என்பது மட்டும்தான் இருந்தது. மற்றபடி விரிவான தகவல்கள் எதுவுமே இல்லை. அதனால்தான்
காவல்துறை தரப்பில் மாநாடு எப்போது தொடங்கும்?, மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக யாரெல்லாம் வருகிறார்கள்? எந்தெந்த பகுதிகளில் இருந்தெல்லாம் தொண்டர்கள் வருகிறார்கள்? பெண்கள், குழந்தைகளுக்கு தனி ஏற்பாடு செய்யப்படுமா? போன்ற 21 கேள்விகளை கொண்ட நோட்டீஸை த.வெ.க-வுக்கு காவல்துறை வழங்கியது.
கடந்த திங்கள்கிழமை இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு 5 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. காவல்துறை வழங்கிய கால அவகாசம் இன்றோடு முடிய இருந்த நிலையில், இன்று பிற்பகலில் த.வெ.க தரப்பில் புஸ்ஸி ஆனந்த அந்த கேள்விகளுக்கு பதில் அடங்கிய மனுவை விழுப்புரம் காவல்துறையிடம் வழங்கினார்.
இன்னும் அந்த பதில் மனுவில் உள்ள முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், நமக்கு கிடைத்த தகவல்படி
மாநாட்டில் விஜய்யை தவிர சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என த.வெ.க சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும், மாநாட்டில் தொண்டர்கள் அமர 55,000 இருக்கைகள் போடப்படவிருப்பதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
தொண்டர்கள் வந்து செல்ல 14 முதல் 16 வழிகளும்… தலைவர்கள் வந்து செல்ல 4 வழிகளும் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து பார்சலாக வழங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். மாநாடுக்கு மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அனுமதி கேட்டிருக்கிறார்கள். கண்காட்சி திறப்பு, கொடியேற்றுதல், தீர்மானங்கள், தலைவர் உரை என நிகழ்ச்சி நிரலையும் வழங்கியிருக்கிறார்கள்.
`காவல்துறை தரப்பில் இன்னும் இரண்டு மூன்று நாள்களில் அனுமதி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்’ என்று புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறார். காவல்துறையின் அனுமதி கிடைத்தாலும் 15 நாள்களில் பெரிய மாநாட்டை நடத்தி முடிப்பது இமாலயச் சவாலான விஷயம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இதற்கிடையே விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்க ஏன் தாமதப்படுத்துகிறீர்கள் என தமிழிசை சௌந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த் போன்றோர் அரசுக்கு கேள்வியும் எழுப்பியிருக்கின்றனர். இதுதொடர்பாக த.வெ.க நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தோம். ‘எங்கள் தரப்பில் மாநாடு நடத்த முழு வீச்சில் தயாராக இருக்கிறோம். நாளைக்குள் காவல்துறையினர் நல்ல தகவலோடு அழைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். நேரம் குறைவாக இருந்தாலும் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க சரியான திட்டமிடலுடன் தயாராகவே இருக்கிறோம்.’ என்கின்றனர். காவல்துறை என்ன செய்யப்போகிறது? த.வ.க தரப்பு என்ன செய்யப்போகிறது? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.