திருப்பத்தூர்: பராமரிப்பின்றி கிடக்கும் வீரபத்திர முதலியார் பூங்கா; சீரமைப்பார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் நகராட்சி 15-வது வார்டில் அமைந்துள்ளது திரு வீரபத்திர முதலியார் பூங்கா. இந்தப் பூங்காவில் அந்தப் பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல, தினமும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் இங்கு உடற்பயிற்சி, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சில நேரத்தில் சிறு சிறு பொதுக்கூட்டங்கள்கூட இங்கு நடைபெறுகிறது. இந்த நிலையில், திரு வீரபத்திர முதலியார் பூங்காவில் கடந்த சில மாதங்களாகக் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது.

மேலும், பூங்காவின் நடுவே இருக்கும் தொட்டியில் தண்ணீர் தேங்கி இருப்பதால், தொட்டியின் உள்ளே குப்பைகளைப் போட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால் இது குப்பை குட்டையாக மாறி சுகாதாரமற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், “இது கடந்த சில மாதங்களாக இப்படித்தான் உள்ளது. மேலோட்டமாக மட்டும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைக் கூட்டி அதே இடத்தில் சேர்த்துவிட்டுச் சென்று விடுகின்றனர். மேலும் சிறுவர்கள் விளையாடும் அனைத்து உபகரணங்கள் உடைந்தும், முறையான‌ பராமரிப்பு இன்றியும் கிடப்பதால், இப்பூங்கா சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

பூங்கா அழகிற்காகப் பொருத்தப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேங்குவது மட்டுமல்லாமல்… அந்த தொட்டியின் உள்ளே குப்பைகளைப் போட்டுச் சென்றுவிடுகின்றனர். பூங்காவில் 2011-ம் ஆண்டில் சுமார் 1.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை தற்போது எவ்வித பராமரிப்பின்றி காணப்படுகிறது.

இதனால் பூங்காவிற்கு வரும் சிலர் ஆங்காங்கே சிறுநீர் கழித்து விட்டுச் சென்று விடுகின்றனர் இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி இப்பூங்காவினை முறையாகச் சீரமைத்துத் தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பூங்காவைச் சீரமைப்பார்களா?!