மராட்டிய மன்னர் சிவாஜி அவரின் ஆட்சியில் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடினார். அதற்குப் பிறகு, 1890 காலகட்டத்தில், அப்போதைய இந்தியாவில், எலிகளால் பரவும் பிளேக் நோய் தீவிரமடைந்தது. இதற்கு எதிராக ஆங்கிலேயர்கள், பிளேக் நோய்க்கு காரணமான எலிகளை கொல்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது. “விநாயகர் வாகனத்தை அழிப்பதா” எனக் கூறி பாலகங்காதர திலகர் அப்போது இந்துக்களைத் திரட்டி போராடினார்.
இதனால், எலிகளைக் கொல்வதற்கான திட்டத்தைக் கைவிட்டது, அப்போதைய ஆங்கிலேய அரசு. அதன் பின்பு, விநாயகர் சதுர்த்தி மும்பை மாநகரம் முழுவதும் நடக்கத் தொடங்கியது. அது மெல்ல இந்தியா முழுவதும் பரவியது. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருகிறார்.
அதில், ‘விநாயகர் சதுர்த்தி செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என உறுதிமொழி எடுக்கவேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சார்பிலும் சுற்றறிக்கை அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கையா… என ஆசிரியர் சங்கம் தரப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இந்த செய்தி பல்வேறு தளங்களில் விவாதமானது. இந்த நிலையில்தான், அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும்.
மேற்காணும் சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல், உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY