சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பாகப் பேசியிருக்கிறார்.
இதனை அந்தப் பள்ளியிலிருந்த ஆசிரியர் ஒருவர் அச்சொற்பொழிவின்போதே கண்டித்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, பள்ளிகளில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தக் கூடாது என ஆசிரியர் வாதிட்டுள்ளார். இதற்கு எதிராக மகா விஷ்ணு பேசியிருக்கிறார். மகா விஷ்ணு அவரைத் தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், நேரில் சென்று அந்த பள்ளியில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு நடத்த இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அசோக் நகர் பள்ளி மட்டுமல்லாமல் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியிலும் மகா விஷ்ணு பேசியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். அறிவியலே முன்னேற்றத்துக்கான வழி” எனப் பதிவிட்டுள்ளார்.
“அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில், இனி இது போன்று நடைபெறாத விதம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” எனப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியுள்ளார்.