சர்ச்சை கிளப்பிய பேச்சு!
சமீபத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “நடந்துமுடிந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதற்குத் தொண்டர்கள், நிர்வாகிகளின் கடுமையான உழைப்பே காரணம். அதிமுகவைப் பொறுத்தவரைத் தலைவர் யார் என்றே தெரியவில்லை. அதிமுக-வில் குழப்பம் நீடிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல் என எதுவந்தாலும் அதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற அனைவரும் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.
கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக திமுகவின் திட்டங்களை மக்களிடத்தில் விரிவாக எடுத்துச் சொல்லவேண்டும். கூட்டங்கள் நடத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலைப் போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமையும் சூழல் இல்லை. சீமான் ஒரு பக்கம், புதிதாகக் கட்சி ஆரம்பித்தவர் இன்னொரு பக்கம், பாமக நம்மைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் நாடாளுமன்றத்தைப் போலச் சட்டமன்ற சூழல் சுமூகமாக இருக்காது. தொண்டர்கள், நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
திமுக அரவணைத்துச் செல்லும்!
ஏற்கனவே திமுக கூட்டணியில் குழப்பமா என்ற பேச்சு எழுந்துகொண்டிருக்கும் நிலையில், கூட்டணி குறித்து நேரு பேசியது கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பெரும் விவாதமாக மாறிய நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “எந்த சூழல் வந்தாலும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தொண்டர்களுக்கு அறிவுரை கூறும் நோக்கத்திலேயே நேரு அப்படிப் பேசியிருக்கிறார். திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. கூட்டணி தொடர்பாக நானோ, நேருவோ சொல்வது கருத்து கிடையாது. முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி சொல்வதுதான் கூட்டணி குறித்த முடிவு. திமுக கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும்” என்று சொல்லியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்த அமைச்சர் நேரு, “கூட்டணி குறித்து லால்குடியில் நான் பேசியதைத் தவறாகத் திருத்தி செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. எங்கள் கூட்டணியைத் தலைவர் ஸ்டாலின் எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டார். கலைஞருக்குப் பிறகு தளபதி ஆட்சியை அடுத்த முறையில் தொடர்ச்சியாகக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் பேசினேன். எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. நிர்வாகிகள் மத்தியில் நான் பேசிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. தோழமை கட்சிகளை வேண்டாம் என்று சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை. அந்த நோக்கத்தில் நான் கருத்தும் சொல்லவில்லை. வலுவான கூட்டணியுடன் நாங்கள் தேர்தலைச் சந்திப்போம்” என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
பலமுனை நெருக்கடி..!
`நாடாளுமன்றத் தேர்தலைப் போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் சூழல் இருக்காது’ என்று நேரு பேசியிருப்பதின் பின்னணி என்ன? என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம்.
“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 2024 தேர்தல் என்பது பாஜக அரசு வேண்டுமா இல்லையா என்பதற்கான தேர்தல். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக வேண்டுமா இல்லையா என்பது இங்குப் பிரதானமான ஒன்று. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தாக்கம் பெரிதளவில் இல்லையென்றாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்டளவு வாக்குகளை வாங்கியிருந்தார்கள். இதே நிலை சட்டமன்றத்தில் நீடித்தால் அது திமுகவின் வெற்றியில் அதிமுக நெருக்கடியை ஏற்படுத்தும்.
திமுக கூட்டணியில் ஒருசில சலசலப்புகள் இருப்பது உண்மைதான். அது அவ்வப்போது வெளிப்படுகிறது. ஆனாலும், இப்போதுவரை ஆளும் திமுக அரசின் கூட்டணியிலிருந்து மாறும் அளவுக்கு பிரச்னை பெரியளவில் இல்லை. இருந்தபோதிலும், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருப்பதும், புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் த.வெ.க கட்சியும் இப்போது திமுகவில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் அந்த கட்சிகளுடன் கூட்டணியை வைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், வலுவாக இருக்கும் ஒரு கூட்டணியைப் பாதுகாப்பதும் திமுகவின் முக்கிய வேலையாக இருக்கும். அதேநேரத்தில், திமுகவும் பாஜகவும் நெருக்கம் காட்டுகிறது. காங்கிரஸ் விஜய் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று கதைகள் கிளம்ப, முதல்வர் ஸ்டாலின், ராகுலும் ஒன்றாகச் சைக்கிள் ஓட்டலாம் என்று சொல்லி வந்த செய்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.
அதிமுகவைப் பொறுத்தவரை இப்போது அங்கு உட்கட்சி பூசல் பெரிதளவில் வெடித்திருக்கிறது. அதனைச் சரிசெய்து அவர்கள் தேர்தலைச் சந்தித்தால் அந்த நெருக்கடி மேலும் வலுப்பெறும். அதனால், அதிமுகவை எளிதாக எடுத்துக்கொள்ளாது திமுக. அதேநேரத்தில் புதிதாக ஒரு கட்சியின் வளர்ச்சியை எந்த ஒரு பிரதான கட்சியும் ரசிக்கவும் செய்யாது. கூட்டணி பிரச்னைகளை தாண்டி, நடந்துவரும் திமுக ஆட்சியின் மீதான வெறுப்பும் ஒரு தரப்பினருக்கு இருக்கவே செய்யும். அந்த வெறுப்பை மாற்றி தங்களின் வாக்கு வங்கியைத் தக்கவைக்க பணிகளைத் தொடங்கவேண்டிய தேவையும் திமுகவுக்குப் பெரியளவில் இருக்கிறது. வரும் தேர்தலில் அதிமுக தான் இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு மிகக் கடுமையாக முட்டி மோதும். இன்னொரு பக்கம் பாஜக கூட்டணி என்ன செய்யப்போகிறது என்பதும் இருக்கிறது. இன்னொரு பக்கம் சீமான் கட்சி களத்தில் இருக்கிறது. இவை அனைத்திற்கும் மத்தியில் தவெக என்று ஒரு புதிய கட்சி களத்தில் இறங்குகிறது. இப்படி வரும் சட்டமன்ற தேர்தல் திமுகவுக்குப் பலமுனை நெருக்கடியை ஏற்படும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார் நேரு” என்றார்கள் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY