ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் ‘G.O.A.T: The Greatest of All Time’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
விஜய் திரைப்படம் என்றால் சர்ச்சைகளுக்குப் பஞ்சமிருக்காது, அதுவும் விஜய் அரசியலில் காலடி எடுத்த வைத்தப் பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் இது. அதனால் அரசியல் கட்சிகளின் கண்கள் விஜய்யை நோக்கித் திரும்பியிருக்கின்றன. விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்றக் கட்சிப் பெயரை அறிவித்தபோதே, ‘தமிழ்நாடு’ எனக் குறிப்பிடாமல் ‘தமிழக’ம் எனக் குறிப்பிட்டது சரியானதில்லை என்றும் கட்சிக் கொடி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன.
தற்போது விஜய்யின் ‘G.O.A.T’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தி.மு.க-வின் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?…’The Greatest of all time’ என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)” எனப் பதிவிட்டது வைரலாகி, பேசுபொருளாகியிருந்தது.
எம்.பி ரவிக்குமாரின் கருத்து குறித்துப் பேசியிருக்கும் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “எங்களிடம்தான் சனாதனம் பார்த்தார்கள் என்றால், இப்போது நடிகர் விஜய்யிடமும் சனாதனம் பார்க்கிறார்கள். முதலில் ‘சனாதனம்’ என்றால் என்னவென்று ரவிக்குமாருக்குத் தெரியுமா? இதில் சந்தோஷம் என்னவென்றால் எங்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்தவர்கள், தம்பி விஜய்யையும் அதையே சொல்லி தாக்குகிறார்கள். இதன் மூலம் ‘சனாதனம்’ என்றால் ரவிக்குமாருக்கு என்னவென்றே தெரியாது என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றுதான் எல்லோருக்கும் தெளிவாகியிருக்கிறது” என்றார் தமிழிசை.