`எங்க கஷ்டம் தீர அரசாங்கம் கருணை காட்டணும்!’ – அரசுப் பணி கோரும் வ.உ.சி வாரிசுகள்

திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவில், வ.உ.சி-யின் வாரிசுகளை காண நேர்ந்தது.

`என்னது, வ.உ.சி-யின் வாரிசா?!’ என்று மேடைக்குக் கீழ் அமர்ந்திருந்தவர்கள் சற்று வியப்புடனே பார்த்தார்கள். எனக்கும் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இலக்கிய கூட்டம் முடிந்த பிறகு, அவர்களோடு விரிவாகப் பேசினேன். அப்போது வ.உ.சி-யின் வாரிசான நெல்லையப்பன், “நான் வ.உ.சிதம்பரனாரின் அஞ்சாவது மகள் சி.ஆனந்தவள்ளி-வள்ளிநாயகம், மகள் சேதுலெட்சுமி-சூரியநாராயணின் மகன். அப்படிப் பார்க்கப் போனா நான் மூணாவது தலைமுறை கொள்ளுப் பேரன். பொறந்து வளந்தது எல்லாம் தூத்துக்குடி மாவட்டத்துலதான். எனக்கு 1989-‘ல ராணிங்கிற பெண்ணோட கல்யாணம் ஆச்சி.

வ.உ.சி

ஆரம்ப காலத்தில தூத்துக்குடியில மதுரா கோட்ஸ் ஆலையில் 20 வருஷம் ஊழியரா வேலை பார்த்தேன். அப்புறம் வேலைய விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை, பிறகு நான் வ.உ.சி-யோட வாரிசு என்ற முறையில, அரசு வேலை வாங்க 41 வயசுல முயற்சி பண்ணி 51 வயசுல தமிழ் வளர்ச்சித்துறை இளநிலை உதவியாளரா வேலை கிடைச்சுச்சு. ஒரு அஞ்சு வருஷம் சென்னை… நாலு வருஷம் திருவாரூர்’லைன்னு காலம் கடந்து  போச்சு. 2022-ல ரிட்டையர்டாகி, அடுத்து என்ன பண்ணுறது’ன்னு கூட தெரியல… புதிய ஓய்வூதிய திட்டத்துல எனக்கு பென்ஷனும் கிடைக்கல. ஏற்கெனவே ரொம்பபி கம்மியான சம்பளம் தான் வாங்கிட்டு இருந்தேன். அதனால எனக்கு சொந்தமா வீடோ, நிலமோ கிடையாது. சம்பாதிக்கிற காசுல குடும்பத்தை நடத்தவே சரியா இருக்கு. எனக்கு ஒரே மகள், அவ பேரு சாய்லெட்சுமி. என் பிள்ளை பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சிட்டு, காலேஜ்ல சேர்க்க ரொம்ப கஷ்டப்பட்டோம்.

பெருசா பண வசதி இல்லாததால ரொம்ப அல்லாடுனோம். தூத்துக்குடியில வ.உ.சி பேருலையே காலேஜ் ஒன்னு இருக்கு. ஆனா அந்த காலேஜ்லயே என்னோட மகளுக்கு சீட் கிடைக்கல. அப்புறம் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.வி.சண்முகம் எங்களோட நிலைமையை தெரிஞ்சு, என்னோட மகளுக்கு அவருடைய சொந்த காலேஜ்ல ஃப்ரீயா சீட் (BE.Tech.ECE) கொடுத்து, படிக்க உதவுனாரு. அதுல என்னோட மகள் முதல் வகுப்புல தேர்ச்சி பெற்று, வெளிய வந்தா… என்னோட குடும்பத்திலேயே முதல் பட்டதாரின்னு சொன்னா… அது எம் பிள்ளைதான்!

திருவாரூருக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்த பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேர்ல பார்த்து, என் குடும்பத்துக்கு ஏதும் உதவி பண்ணச் சொல்லி, இரண்டு முறை மனு கொடுத்தேன். இதை வாங்கிப் பார்த்த அவரு, `கண்டிப்பா உதவி பண்றே’ன்னுசொன்னாரு… ஆனா இப்ப முன்ன மாதிரி இல்ல, குடும்பத்தை ஓட்டவே ரொம்ப கஷ்டமா இருக்கு. வீட்டு வாடகை, குடும்ப செலவ ஈடுகட்ட ஒரு பேக்கரி கடையில ரெண்டு வருஷமா தினக்கூலியா வேலை பார்த்துட்டு வர்றேன். எனக்கு ஒரு நாள் சம்பளம் 500, மிஞ்சி மிஞ்சி போனா மாசத்துக்கு 15 ஆயிரம் கிடைக்கும். இந்தச் சம்பளத்தை வெச்சிக்கிட்டு குடும்பத்தை நடத்த ரொம்ப கஷ்டப்படுறேன். தமிழ்நாடு அரசாங்கம், இந்த வ.உ.சி வாரிசோட நிலைமையைக் கருத்தில் கொண்டு, என்னோட மகளுக்கு ஓர் அரசாங்க வேலை கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும்” என்றார்.

நெல்லையப்பன் குடும்பம்

நெல்லையப்பனின் மகள் சாய்லெட்சுமியிடம் பேசினோம். “2018-ல சென்னை மெட்ரோபொலிட்டன் வாட்டர் சப்ளை அண்ட் சீவேஜ் போர்ட்ல ஏ.இ போஸ்டுக்கு செலக்ட் ஆனேன். இதுல சர்டிஃபிகேட் வெரிஃபிகேஷன் வரைக்கும் நான் போனேன். ஆனா, அதுல என்னோட பேர்ல சாய்க்கும் லெட்சுமிக்கும் இடையில அப்ளிகேஷன்ல கேப் விடலைன்னு சொல்லி, என்னோட அப்ளிகேஷனை நிராகரிச்சுட்டாங்க. குடும்ப கஷ்டத்தை அந்த அரசாங்க வேலை போக்கிடும்னு ரொம்ப உறுதியா நம்பிக்கிட்டு இருந்தேன். என்னோட நம்பிக்கை மொத்தமா பொய்ச்சிடுச்சு. அதுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூருக்கு வந்தப்ப, நேர்ல பார்த்து வ.உ.சி-யோட எள்ளு பேத்தி என்கிற முறையில எனக்கு கருணை அடிப்படையில் தகுதிக்கு ஏத்த அரசு வேலை கொடுக்கச் சொல்லி மனு கொடுத்தோம். கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசனும் இது சம்பந்தமா மு.க.ஸ்டாலினுக்கு லெட்டர் அனுப்புனாரு. ஆனா இதுவரைக்கும் எந்த முன்னெடுப்பும் இல்லை. என்னோட தாத்தாவான வ.உ.சி, எப்படி குடும்பம் நடத்த கஷ்டப்பட்டாரோ அதுபோல எங்க அப்பாவும் குடும்பத்தை நடத்த பேக்கரி கடையில் கடந்து கஷ்டப்படுறாரு… எங்க கஷ்டம் என்னைக்குத்தான் தீரப் போகுதோ தெரியல” என்றார் கண்களை கசக்கியபடி!