பேட்டிகள், ஆளுநருடன் சந்திப்பு, டெல்லி பயணம்… ஹெச்.ராஜாவின் தீவிர நகர்வுகளுக்கு பின்னால்..?!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை டெல்லி அமைத்திருக்கிறது. அதில் மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், ராம சீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தான் பொறுப்பேற்றது முதல் ஆளுநருடன் சந்திப்பு, டெல்லி பயணம் என ராஜா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு ஆளுநர் R N Ravi

32 ஆண்டுகளாக பாஜக பொறுப்பில் இருக்கிறேன் – ஹெச்.ராஜா

முன்னதாக ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், “ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்தித்துப் பேசினேன்.

5 ஆண்டுகளுக்கு முன்பாக குளித்தலையில் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சான்றிதழ் அளித்த ஊழல்வாதி செந்தில் பாலாஜி. அவர் மீதான வழக்கை ஊழல் தடுப்பு துறை விசாரணை செய்ய ஆளுநர் அனுமதி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, ‘தி.மு.க ஆட்சிக்கு வரும், அப்போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்’ என்றார். அதன்படி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி ஜெயிலுக்குச் சென்று விட்டார்.

அ.தி.மு.க எப்படிச் செயல்படுகிறது. நண்பர் எடப்பாடி அந்தக் கட்சிக்கு எம்டியா அல்லது சேர்மனா?. அ.தி.மு.க-வினர் ஏதுவாக இருந்தாலும் யோசித்துப் பேச வேண்டும். நான் பா.ஜ.க கட்சி தொடங்கியபோது முன்னிலையிலிருந்தவன்.

பலரும் ராஜா பதவியிலேயே இல்லை என்று நினைக்கின்றனர். தொடர்ந்து, 32 ஆண்டுகளாகக் கட்சிப் பொறுப்பில் இருக்கிறேன். இப்போதும் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளேன். இன்றைக்குக் கட்சியை வழிநடத்தும் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். பல அ.தி.மு.க அமைச்சர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பிலிருந்து நான் பா.ஜ.க-வில் இருந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

இவ்வாறு முதல்வர் வெளிநாடு பயணம், கார் ரேஸ் என பல்வேறு தருணங்களில் தனக்கே உரித்தான பாணியில் அதிரடியாகப் பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். இதையடுத்து டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

மாற்றங்கள் வர வாய்ப்பில்லை…

குபேந்திரன்

ஹெச்.ராஜாவின் நகர்வுகள் குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “ஹெச்.ராஜாவிடம் இருந்து எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய அறிக்கைகள் இல்லை. பழனி முருகன் மாநாட்டை இந்து விரோத மாநாடு என்று பேசினார். பிறகு ஆளுநரைச் சந்தித்தார். அதற்குக் கூட அண்ணாமலை சொல்லித்தான் அப்பாய்ன்மெண்ட் கிடைத்தது என்கிறார்கள். ஹெச்.ராஜா பலமுறை முயற்சி செய்தும் சந்திப்பதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள். இதன் மூலம் அண்ணாமலை வெளிநாடு சென்றாலும் அவரது கட்டுப்பாட்டில்தான் தமிழக பா.ஜ.க இருக்கிறது என்கிறார்கள். பா.ஜ.க-வில் எதிர்பார்த்த அதிர்வலைகள் எதுவும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் ஒருங்கிணைப்புக் குழு அண்ணாமலை சொல்லித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால் அந்த குழுவில் இருக்கும் கருப்பு முருகானந்தம், அண்ணாமலைக்கு எதிரானவர். இருப்பினும் தமிழக பா.ஜ.க-வில் பெரிய மாற்றங்கள் எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார்.

மூன்று விதமான அசைன்மென்ட்…

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “பொறுப்புக்குழு தலைவர் பதவி கொடுத்ததால் ஆளுநரைச் சந்தித்து இருக்கிறார். தமிழிசை கூட சந்தித்து இருக்கிறார். தமிழிசை, ராஜா போன்றோருக்கு தற்போது தமிழக பாஜக தலைவர் ஆளுநர்தான் என நினைக்கிறேன். அதனால்தான் அங்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ராஜாவுக்கு என்ன பதவி கிடைத்துவிட்டது என ஆளுநரைச் சென்று சந்திக்கிறார். அரசு பதவியில் இருக்கிறீர்களா?. மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார்களா?. இதன் மூலம் ஆளுநரும், பா.ஜ.க-வும் ஒன்று என்பது தெளிவாகிறது.

ப்ரியன்

இந்த குழுவுக்கு மூன்று விதமான அசைன்மென்ட் கொடுத்து இருக்கிறார்கள். அது தி.மு.க-வுக்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க-வை கூட்டணிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும். 2026 தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில்தான் எடப்பாடியை நண்பர் என ராஜா அழைத்திருக்கிறார். அ.தி.மு.க-வுடன் உறவை நெருக்கமாக்கும் வேலைகளைச் செய்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் சொல்வதை கேட்க ஆரம்பித்துவிட்டது

அண்ணாமலையின் முதல் மூன்று ஆண்டுக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. அதற்குள் இந்த கமிட்டி அ.தி.மு.க-வுடனான நெருக்கத்தை அதிகரித்து விட்டார்கள் என்றால் மீண்டும் அண்ணாமலைக்குப் பதவியை நீட்டிப்பு செய்யமாட்டார்கள். நிறைய மாநிலங்களில் தேர்தல் வரவுள்ளதால் அங்குப் பொறுப்பாளராக நியமனம் செய்வார்கள். அ.தி.மு.க-வை அதிகம் தாக்கி பேச வேண்டும் என ராஜாவே தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியிருக்கிறார். தீவிர ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்தான் ஆளுநர். அவர் எப்படி ஹெச்.ராஜாவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்காமல் இருப்பார்.

அண்ணாமலை

ராஜாவுக்கு ஆளுநர் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கவில்லை எனத் போலியான தகவலை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள். இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவில் கரு.நாகராஜன் போன்ற அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு இல்லை. எனவேதான் இப்படி தகவலைப் பரப்புகிறார்கள். அண்ணாமலை தீவிர அ.தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கிறார். ஆனால் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் அ.தி.மு.க. கூட்டணியை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும் தீவிரமான ஆர்.எஸ்.எஸ். பின்னணியையும் கொண்டவர்கள். பாஜகவும், ஆர்எஸ்எஸ் பிரிந்து இருந்தது. தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மீண்டும் ஆர்எஸ்எஸ் சொல்வதை பாஜக கேட்க ஆரம்பித்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது” என்றார்.