திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டையை ஆர்.காமராஜ் வழங்கி பேசியதாவது, அதிமுக-வில் இரண்டு கோடி உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு எது பதிலாக இருக்கும் என்றால் 2026 தேர்தல் ஒரு நிறைந்த பதிலாக இருக்கும். உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் தொடர்ந்து ஆதரிக்கின்ற இயக்கம் அதிமுக.
திமுக-வை பொறுத்தவரை அதிமுக கட்சிக்குள் ஏதாவது பிரச்னை நிலவும் போது அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வரும் கட்சி தான் திமுக. தவிர பொதுமக்களே ஆதரித்து இன்றைக்கும், என்றைக்கும் திமுக ஆட்சிக்கு வந்தது கிடையாது. இன்றைக்கும் அதே நிலைதான். கூட்டணி கட்சிகளை வைத்துக் கொண்டு எப்படியும் ஆட்சி நடத்தி விடலாம் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது திமுக ஆட்சி. வருங்காலத்தில் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கும் நாம் பணி ஆற்ற வேண்டும் என்றார்.