`சிஸ்டர், பிரதர்… மன்னித்து விடுங்கள்’ – எழுதிவைத்துவிட்டு டூவீலர், உண்டியலை திருடிய மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பெரம்பலூர் புறவழிச்சாலை அருகே உள்ள செல்வம் நகரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், துறையூரில் இயங்கிவரும் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் இளங்கோவுக்கு, மஞ்சு என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் குடும்பத்தோடு தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளார். சொந்த ஊரில் சில தினங்களை கழித்தவர், தனது குடும்பத்தோடு மறுபடியும் துறையூருக்கு வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டுக்குள் சென்று அவர் பார்த்தபோது, மர பீரோ உடைக்கப்பட்டிருப்பதை பார்த்துள்ளார். அதில் பணம் எதுவும் இல்லாததால், திருட வந்த மர்ம நபர்கள், தனது குழந்தைகள் பணம் சேர்த்து வைத்திருந்த உண்டியலை எடுத்துச் சென்றிருப்பதை பார்த்துள்ளார். அதோடு, அங்கு திருட வந்த மர்ம கும்பல், வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் துணிகளை களைத்துப் போட்டு, பணம், நகை இருக்கிறதா என்று தேடியிருக்கின்றனர். அங்கு எதுவும் கிடைக்காததால், அந்த உண்டியலையும், வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த டி.வி.எஸ் ஜூபிடர் என்ற இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

உடைக்கப்பட்ட பீரோ

இந்நிலையில் தான், பணம், நகை எதுவும் கிடைக்காத விரக்தியில் அந்த மர்ம நபர்கள் வீட்டின் சுவற்றில் கிரேயான் பென்சிலால், ‘சாரி சிஸ்டர் ஆர் பிரதர்… மன்னித்து விடுங்கள்’ என்று எழுதி வைத்திருந்ததை பார்த்து மேலும் இளங்கோ அதிர்ச்சியடைந்தார். இதனால், இது பற்றி இளங்கோ உடனடியாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் பேரில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இளங்கோ தனது புகாரில் மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற உண்டியலில் ரூ.2,000 வரையும், அவர்கள் திருடிச் சென்ற பைக்கின் விலை ரூ. 1 லட்சம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திருட வந்த இடத்தில் மர்ம நபர்கள், ‘மன்னித்து விடுங்கள்’ என்று எழுதி வைத்துவிட்டு டூவீலரை திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது.