`பொறுப்பு’ உணராத ஊர்மக்கள்; `அலட்சிய’ அதிகாரிகள்… பாழாய்ப்போகும் `பண்டாரங்குளம்!’

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் அக்ரஹாரம் தெருவை அடுத்து அரசு மாணவியர் விடுதி எதிரில் பண்டாரங்குளம் அமைந்துள்ளது. பல வருடங்களாகச் சுற்றியுள்ள தெருக்களிலிருந்து வரும் கழிவுநீர், இந்தக் குளத்தில் கலந்து குளத்தின் நீர் மாசடைந்து காணப்படுகிறது. 45 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊர்மக்கள் இந்தப் பண்டாரங்குளத்தைத்தான் தங்கள் தண்ணீர் தேவைக்குப் பயன்படுத்தி வந்தனர். மேலும் இக்குளத்தின் நடுவில் சமுதாய கிணறும் உள்ளது. காலப்போக்கில் மக்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால், படிப்படியாகக் கைவிடப்பட்டு கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது, பண்டாரங்குளம்.

பண்டாரங்குளம்

செடி, புதர் மண்டி காணப்படும் இந்தக் குளத்தின் கரையோரத்தில் ஊர்மக்கள் குப்பைகளைக் கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். கரையில் கொட்டப்படும் குப்பைகள் குளத்தில் விழுந்து, மோசமான நிலையை ஏற்படுத்துகின்றன. மக்களில் பலர் குப்பைகளை நேரடியாகக் குளத்துக்குள் வீசிச் செல்வது, கொடுமையிலும் கொடுமை!

குளத்தின் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இந்தக் குளம் பல மாதங்களாகத் தூர்வாரப்படாமல் உள்ளது. மக்களின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து, பேரூராட்சி இக்குளத்தில் உள்ள கழிவுநீரை வெளியே எடுத்துச் சுத்திகரிக்கும் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

தினந்தோறும் இந்தப் பண்டாரங்குளத்தின் கரை வழியாக, நூற்றுக்கணக்கான மாணவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். எனவே, அவர்களும் நோய்த்தொற்று குறித்த அச்சத்துடனே ஒவ்வொருமுறையும் இந்தக் குளத்தைக் கடந்து செல்கின்றனர். இக்குளத்தைச் சரியாகப் பராமரிக்காததாலும், கொட்டப்பட்ட குப்பைகளினாலும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் இக்குளத்தில் கழிவுநீர் மட்டமும் உயர்ந்து விடுகிறது.

இக்கழிவுநீர் குளத்தில் அருகே மேயும் கால்நடைகள் விழும் அபாயமும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் மான் ஒன்று நாய்களால் துரத்தப்பட்டு, இக்குளத்தில் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்தும், மானின் உடலைக்கூட மீட்க முடியவில்லை.

பண்டாரங்குளம்

மேலும் மூன்று மாதங்களுக்கு முன்னர் பக்கத்துத் தெருவைச் சேர்ந்தவரின் கன்றுக்குட்டி ஒன்று உள்ளே விழுந்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து மீட்டனர்.

எனவே, இந்தப் பண்டாரங்குளத்தைத் தூர்வாரி, வேலி அமைத்து, உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, கரைகளைச் சுத்தப்படுத்திச் சீர்படுத்தப் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டாரங்குளம்

மேலும், மக்களுக்கும் நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அரசாங்க அமைப்புகளின் முயற்சிகள், நடவடிக்கைகளைத் தாண்டி…. தனிமனித ஒழுக்கமும், பொறுப்புணர்தலும் மிக மிக அவசியமானது என்பதை மக்களாகிய நாமும் புரிந்து செயல்பட வேண்டும்.