தூத்துக்குடிக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பைபிள், கந்த சஷ்டிக் கவசம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் ’அந்த வார்த்தை’ இடம்பெற்றுள்ளது. இந்த வார்த்தையை கூறியதற்காக என்மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, அநியாயம். நானே ஒரு தாழ்த்தப்பட்டவன், என்மீது ஏன் வழக்கு தொடுத்துள்ளனர்?
என்னுடைய அரசியலை சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர். விளையாட்டில் ஆர்வம் இருந்தும் விளையாட வாய்ப்பு இல்லாத சிற்றூர்கள் மற்றும் கிராமங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு கைப்பந்து, கால்பந்து போன்ற பயிற்சிகள் கொடுத்து உரிய போட்டிகளை நடத்த வேண்டும். ஆனால், மேல்தட்டு மக்களுக்காக ஃபார்முலா கார் பந்தயம் என்பது தேவையற்றது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் இந்த கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. இது அநியாயம். சிதிலமடைந்த ஆயிரக்கணக்காண பள்ளிக்கூடங்கள், மேற்கூரைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர். 300 பெண்கள் படிக்கக்கூடிய பள்ளியில் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளது, இதையெல்லாம் சீரமைக்க வேண்டும்.
தமிழகத்தில் போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகரிப்பதுதான் பாலியல் சீண்டலுக்குக் காரணமாக அமைகிறது. மாத்திரை, ஊசி உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக பாலியல் சீன்டல்களும் அதிகமாக நடைபெறுகிறது. போதைப்பொருள்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.