Coimbatore Farmer: `நீங்க கடவுளும் இல்லை, அரசரும் இல்லை’ – பத்திரப்பதிவு அதிகாரியை விளாசிய விவசாயி

கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் சுமார் 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் தொழில்பூங்கா அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

கோவை

இதில் 2,500 க்கும் மேற்பட்டவை விவசாய நிலங்களாகும்.  இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். போராட்டம் தீவிரமடைந்ததால், கடந்தாண்டு திமுக மூத்தத் தலைவரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ.ராசா, விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்த மாட்டோம். என்று அறிவித்திருந்தார்.

இதனால் விவசாயிகள் போராட்டம் ஓய்ந்திருந்தது. இருப்பினும் அந்த 6 பஞ்சாயத்துகளிலும், கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலங்களில் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு இன்னும் நீக்கவில்லை.

இதனால் தங்கள் நிலங்களை விற்பதற்கும், பாகப்பிரிவினை செய்வதற்கும், நிலத்தின் பேரில் கடன் வாங்கவும் முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஒருபக்கம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தமாட்டோம் என்று கூறிய அரசு, மறுபக்கம்  விவசாய நிலங்களை பதிவு செய்யமாட்டோம் என்று கூறிவது அந்தப் பகுதி விவசாயிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

கோவை விவசாயிகள்

இதுகுறித்து, அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது பத்திரப்பதிவு துறை சார் பதிவாளர் செல்வ பாலமுருகன் கையில் சில ஆவணங்களுடன் வந்து, “வதந்திகளை நம்பாதீர்கள். பத்திரப்பதிவு  நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. உங்களுக்கு யாரோ தவறான தகவல்களை தந்துள்ளனர்.” என்றார்.

பத்திரப்பதிவு துறை அதிகாரி

இதற்கு பதிலளித்த விவசாயிகள், “நீங்கள் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள். மக்களுடன் முதல்வர் கூட்டத்தில் கூட, பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க சொல்லியுள்ளதாக நீங்கள் கூறினீர்கள்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த அதிகாரி அலுவலகத்துக்குள் செல்ல முயற்சித்தார்.

அதற்கு விவசாயி சங்க தலைவர் குமார ரவிக்குமார், “ஜாக்கிரதை. எங்களை எல்லா பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறது.  கேட்பதற்கு முறையாக பதில் சொல்லுங்கள். காவல்துறையை மீறி எதுவும் நடக்காதா. ஆன்லைனில் புகார் பதிவு செய்துவிட்டு, உயர் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி வந்து நடவடிக்கை எடுப்போம். நீங்கள் ஒன்றும் கடவுள் இல்லை. அரசரும் இல்லை.

விவசாயி கேள்வி

நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. நீங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நியமிக்கப்பட்டுள்ள அரசு பணியாள். எங்கள் மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டப்படி பணியாற்றாவிடின் உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என்றார்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது!