தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிப்பதற்காக அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள நம் தமிழக முதல்வர் ஸ்டாலின், லேட்டஸ்ட்டான ஒரு காரில் பயணம் செய்வது போன்ற வீடியோ வலைத்தளங்களில் படுவைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.
‛காரில் பயணிப்பதெல்லாம் ஒரு விஷயமா?’ என்றால், அது ஒரு டிரைவர்லெஸ் கார் எனும்போது, ஒரு எக்ஸைட்மென்ட் இருக்கத்தானே செய்யும். Stalin Enjoying driverless Car in San Francisco என்கிற பதிவுடன், முதல்வர் ஸ்டாலின் அந்தக் காரின் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதுபோல் இருக்கிறது அந்த வீடியோ. அந்தப் பதிவில் சொல்லப்படுவதுபோல், ஸ்டாலின் என்ஜாய் செய்கிறாரோ இல்லையோ, ஹாரர் படங்களில் வருவதுபோல் அந்தக் காரின் ஸ்டீயரிங் தானாகத் திரும்பி, தானாக ஆக்ஸிலரேட்டர் மிதித்து டிராஃபிக்கை மதித்துக் கிளம்புவது – ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு ஜாலியாகத்தான் இருக்கும்.
ஸ்டாலின் என்ஜாய் செய்த அந்தக் கார் – ஜாகுவார் நிறுவனத்தின் I-Pace எஸ்யூவி கூபே. ஜாகுவார் லேண்ட்ரோவரும், Waymo என்கிற தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருந்தன. அதன் அடிப்படையில் உருவானதுதான் – இந்த வேமோ – ஜாகுவார் ஐ-பேஸ் தானியங்கி எலெக்ட்ரிக் கார்.
இதில் இருப்பது Waymo’s செல்ஃப் டிரைவிங் டெக்னாலஜி. காரின் ரூஃபுக்கு மேலே ரேடார் கருவி கொண்டு இயங்கும் இந்த கார், போக்குவரத்து நெருக்கடியையும், சிக்னல்களையும் ரேடார் மூலம் கணித்து, சென்சார் மூலம் இயங்கும் விதம் அற்புதமாக இருக்கும். இது ஒரு முழு எலெக்ட்ரிக் எஸ்யூவி கூபே. ரேடார் மாதிரி, Light Detection மூலம் இயங்கும் லைடார் (Lidar) லேசர் லைட் தொழில்நுட்பமும் இதில் இருக்கிறது.
மேலும் இந்தக் காரைச் சுற்றிலும் 30 வகையான பெரிமீட்டர் கேமரா எனும் ஸ்மார்ட் புகைப்படக் கருவிகளை இன்ஸ்டால் செய்துள்ளார்கள். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் குளிரும் பனியும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற காலநிலைகளில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் துல்லியமாக இல்லாத பட்சத்தில், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
அதற்குத்தான் ஸ்பெஷல் தொழில்நுட்பத்துடன் இயங்குகின்றன இந்த பெரிமீட்டர் கேமராக்கள். வாகனத்துக்கு நெருக்கமாக Moving Objects மற்றும் Non-Movable Objects இருக்கும் பட்சத்தில், இது தானாக பிரேக் பிடிக்கும்.
உதாரணத்துக்கு, இந்தக் காரை டெஸ்ட் செய்யும் ஒரு வீடியோவில் – ஒரு கட்டுமானப் பணியாளர் ஒருவர் சிவப்பு நிற ஸ்டாப் சிக்னலை காட்டுகிறார். அப்போது கார் தானாக நிற்கிறது. அந்த சிக்னலை அவர் திருப்பியவுடன் கார் தானாக நகர்ந்து கிளம்புகிறது. அதேபோல் ஜீப்ரா லைன் க்ராஸிங் இருந்தால், அதற்கு 10 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே கார் தானாக நிற்பதும் அருமை.
அமெரிக்காவில் செல்ஃப் டிரைவிங் அட்டானமஸ் கார்களுக்கு டெஸ்லா போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க, ஜாகுவாரும் வேமோவும் இதைப் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்கச் சாலைகளில் விட்டிருக்கிறது. டிரைவர் சீட்டில் யாருமே இல்லாத இந்த செல்ஃப் டிரைவிங் கார்களில், பொதுப் போக்குவரத்தைக்கூட லாஞ்ச் செய்திருந்தது வேமோ. ஆப் மூலம் மக்கள் இதை புக் செய்து வாடகை கேப் ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் போக வேண்டிய இடத்தை ஆப்பில் மார்க் செய்துவிட்டு – காரில் பேசாமல் உட்கார்ந்து கொண்டால் போதும் – உங்கள் இறக்கத்தில் தானாக கார் பார்க் ஆகிக் கொள்ளும். Waymo இதற்காகவே ஜாகுவாரிடம் இருந்து 20,000 எலெக்ட்ரிக் கார்களை பர்ச்சேஸ் செய்து, செல்ஃப் டிரைவிங் கார்களாக்கி இருக்கிறது.
ஆனால், சாலையில் இதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். வேமோவில் பயணித்த வாடிக்கையாளர் ஒருவர், ஒரு பார்க்கிங் ஸ்பாட்டில் சிவப்பு நிற கோன்கள் இருந்ததைக் கண்டு குழம்பிப் போனதாகவும், கார் பார்க் ஆக 15 நிமிடம் எடுத்துக் கொண்டதாகவும் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இன்னொரு வாடிக்கையாளர் – சில விளையாட்டு ஆசாமிகள் வேண்டுமென்றே ஸ்டாப் சிக்னலைக் காட்டி காரைக் குழப்பியதாகவும் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் டெஸ்லாவை முந்திக் கொண்டு செல்கிறது Waymo என்றும் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள் மக்கள். அது சரி; இதோட விலை என்னனு கேட்கிறீங்களா? ஒரு சாதாரண ஜாகுவார் ஐ-பேஸ் காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.25 கோடி வருகிறது. ரேடார், லைடார், பெரிமீட்டர் கேமரா என்று பல சமாசாரங்கள் இருப்பதால் விலை சுமார் ரூ2.25 கோடி வரும். ஆனால், Waymo இதை விற்பனை செய்யவில்லை. அதனால், இது விற்பனைக்கல்ல!