தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுமான கடம்பூர் ராஜூ, “வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தேர்தலாக இருக்கும். பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கான நலவாரியம் கொண்டு வந்தது அ.தி.மு.க ஆட்சியில்தான்.
இன்றைக்கு அந்த நல வாரியம் முறையாக செயல்படுகிறதா என்பதை அரசு உறுதிபடுத்த வேண்டும். போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கைதுசெய்யப்படும் நிலை உள்ளது. கருத்துரிமை, பேச்சுரிமை இருப்பதற்காக வரம்பு மீறும்போது நடவடிக்கை எடுக்கலாம். நடவடிக்கை என்பது வேறு. அடக்குமுறை என்பது வேறு. அரசியலுக்கு அனுபவம்தான் தேவை.
அண்ணாமலை அரசியல் செய்வதற்கு ஆராய்ச்சி படிப்பு தேவையில்லை அனுபவம்தான் தேவை. அப்படி அனுபவம் இல்லை என்றால் முறையாக நடந்து கொள்ள வேண்டும். வயது மூத்த பெரிய இயக்க தலைவர்களை எப்படி பேச வேண்டும் எனத் தெரிய வேண்டும். அரசியல் அரிச்சுவடியே பண்போடு பேச வேண்டும் என்பதுதான். எப்படி நாகரிகமாக பேச வேண்டும் என்பது குறித்து அவர் மேல் படிப்பு படித்தால் நன்றாக இருக்கும்.
அதை விட்டுவிட்டு ஆராய்ச்சி படிப்பு படித்தால் எந்தப் பயனும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க-வை குழுவை வைத்துதான் நடத்த முடியும் என்ற நிலைக்கு அன்ணாமலை தள்ளிவிட்டுவிட்டார். அ.தி.மு.க-வினரால் வளர்க்கப்பட்டவர் டி.டி.வி.தினகரன். அவர் தன் வாழ்நாளிலே இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றிருக்கக் கூடாது. அ.தி.மு.க-வின் துரோகி என்ற அடிப்படையில்தான் அவரை மக்கள் புறந்தள்ளினர்.” என்றார்.