கோவை பாஜக தெற்கு மாவட்ட தலைவராக இருப்பவர் வசந்தராஜன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். நேற்று முன்தினம் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது, ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற வாசகத்துடன் கூடிய சட்டமன்ற வடிவிலான கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ‘வருங்கால சட்டமன்றமே வாழ்க பல்லாண்டு.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது தமிழ்நாடு அரசை அவமதிக்கும் செயல் என திமுகவினர் கொந்தளித்து வருகின்றனர். இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், “வசந்தராஜன் ஒரு கவுன்சிலர் பதவியில் கூட இல்லை. மாநிலத்தில் பாஜக ஆட்சியும் இல்லை. அவர் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியை குறிவைத்து பணியாற்றி வருகிறார். அதை யாரும் குறை சொல்லவில்லை.
ஆனால் எந்தப் பதவியிலும் இல்லாமல் தமிழ்நாடு அரசு என்று குறிப்பிட்டு, கேக் வெட்டுவது என்பது அவமதிக்கும் செயல். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.
இதுகுறித்து வசந்தராஜனிடம் விளக்கம் கேட்டபோது, “எனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக் அது. பொதுவாக அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்தும்போது, சட்டமன்றம், நாடாளுமன்றம் வடிவில் மேடை அமைப்பது, போஸ்டர் அடிப்பது சஜகம்.
அப்படித்தான் இதுவும். எங்கள் கட்சியிலும் சட்டமன்ற, நாடாளுன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, எங்களுக்கு தமிழ்நாடு அரசை அவமதிக்கும் நோக்கம் இல்லை.” என்றார்.