சேலம் காவடி பழநியாண்டவர் ஆசிரம ஆலய முகப்பில் 109-வது லக்ஷ்மியாக 135 அடி உயரமுள்ள பிரமாண்ட ஸ்ரீவிஸ்வரூப செல்வ மகாலட்சுமி எழுந்தருள இருக்கிறாள். உலகில் வேறெங்குமே இல்லாத வகையில் சிந்த பிரமாண்ட சிலை எழ உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.
சேலத்தில் குறைகள் தீர்க்கும் கோயிலாகவும் வியாதிகளைப் போக்கும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது முருகனின் ஒன்பதாம் படை வீடான ஸ்ரீகாவடி பழநியாண்டவர் ஆசிரம ஆலயம். இந்த ஆசிரம வளாகம் பல நூறு தெய்வங்களின் சந்நிதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இங்கு 108 வெவ்வேறு மகாலட்சுமியின் திருவடிவங்களைக் கொண்டு செல்வவளம் அருளும் திருத்தலமாகவும் இருந்து வருகிறது.
சகல தெய்வங்களின் அருள் மட்டுமின்றி எண்ணற்ற சித்தர்கள்; யோகிகள் அருள் சாந்நித்யமும் பெற்று விளங்குகிறது இந்த ஆலயம். அருள்மிகு செங்கோட சித்தர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோர் ஆசியால் தொடங்கப்பட்ட இந்த ஆஸ்ரமம், சகல தெய்வ சந்நிதிகளையும் கொண்டு, நாள்தோறும் சிறப்பு ஆராதனைகளும் ஹோம வைபவங்களும் நடைபெற சிறப்புடன் விளங்கி வருகின்றது.
ஸ்ரீதீர்த்த பிள்ளையார் தொடங்கி ஷீர்டி சாயிபகவான் வரை இங்கு சகல தெய்வங்களின் திருச்சந்நிதிகளும் உள்ளன. அதிலும் வள்ளி, தெய்வயானை சமேத ஸ்ரீகாவடி பழநியாண்டவர், ஸ்ரீசர்வலோகநாயகி சமேத சர்வதோஷ நிவர்த்தீஸ்வரர், ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீதிருப்பதி வேங்கடாசலபதி, பக்த ஆஞ்சநேயர், ஹயக்ரீவர் சந்நிதிகள் இங்கு மிக மிக விசேஷம் எனலாம்.
இறையருள் பெற்ற சித்தர் செங்கோட கவுண்டர், சித்தர் பாவாயம்மாள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட முருகப்பெருமானின் ஒன்பதாம் படை வீடு கொங்கு மண்டலத்தில் மிகவும் விசேஷமான திருத்தலம். ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆசிரமம், சேலம் ஜங்ஷன், ஸ்டீல் பிளான்ட் சாலையில், ஜாகீர் அம்மாபாளையம் ஸ்ரீ வீரமாதுருபுரியில் அமைந்துள்ள இந்த திருக்கோயில் ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் வழிபடும் தலமாக உள்ளது.
சிறப்பினும் சிறப்பான இந்த ஆலயத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்க இங்கே பிரமாண்ட வடிவில் திருமகள் எழுந்தருள இருக்கிறாள். ஆம், சேலம் காவடி பழநியாண்டவர் ஆசிரம ஆலய முகப்பில் 109-வது லக்ஷ்மியாக 135 அடி உயரமுள்ள பிரமாண்ட ஸ்ரீவிஸ்வரூப செல்வ மகாலட்சுமி எழுந்தருள இருக்கிறாள். உலகில் வேறெங்குமே இல்லாத வகையில் சிந்த பிரமாண்ட சிலை எழ உள்ளது என்கிறார்கள் பக்தர்கள். சிலை எழும்பும் நிகழ்வில் முக்கிய கட்டமாக இந்த ஸ்ரீவிஸ்வரூப செல்வ லக்ஷ்மியின் பாதங்கள் அமையும் பீடத்தில் 1008 ஸ்ரீசக்கரம் ஸ்தாபிதம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருப்பணியில் பக்தர்களும் தங்கள் கைப்பட ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து ஸ்ரீ விஸ்வரூப செல்வ லக்ஷ்மியின் அருளைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது ஆலய தேவஸ்தானம்.
வரும் 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியளவில் சேலம் ஸ்ரீவிஸ்வரூப செல்வலட்சுமிக்கு 1008 மூலிகை திரவியங்களால் ஹோமங்கள் நடைபெறும். பிறகு 108 தாமரை பூக்களால் மஹாலக்ஷ்மி ஹோமம் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் ஸ்ரீசக்கரம், தங்கம் , வெள்ளி காசுகள், நவரத்தினம், பஞ்சலோகம் போன்றவற்றையும் ஸ்ரீவிஸ்வரூப செல்வ லட்சுமியின் பாதங்கள் அமையும் பீடத்தில் வைக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் தங்கள் கைகளால் ஸ்ரீசக்கரம் வைத்து வழிபடுவது என்பது உங்களுக்கு மட்டும் அல்ல; உங்கள் வம்சத்துக்கே செல்வவளம் அருளி காக்கும் என்பது நம்பிக்கை. நீங்கள் வைக்கும் ஶ்ரீசக்கரம் உங்கள் ஏழேழ் தலைமுறைகள் உள்ள வரை; காவேரி உள்ள வரை; ஏன் இந்த பூலோகம் உள்ள வரைக்கும் நிலைத்திருக்கும். அதுவரை அன்னை மஹாலக்ஷ்மியும் உங்கள் தலைமுறையுடன் இருந்து அருள்பாலிப்பாள். பஞ்சலோகம், நவரத்தினம், வலம்புரி சங்கு, கோமதி சக்கரம், சுதர்சன சக்கரம், குன்றிமணி, விசேஷ நாணயங்கள், வெள்ளி காசுகள், தங்க தாமரை பூ, தாமரை பூ விதை போன்றவையும் இந்த ஸ்ரீசக்ர பிரதிஷ்டையில் சமர்ப்பிக்கப்படும் என்பதும் விசேஷம்.
செல்வவளம் வேண்டும் அன்பர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திருமகளின் ஆசி பெறலாம்!