சென்னையின் இரவு நேர வீதி கார் பந்தயம் இரண்டு நாள்கள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முதல் நாளான நேற்று போட்டிகள் நடைபெறவே இல்லை. வெறுமென பயிற்சிகளும் ஸ்டன்ட் ஈவன்ட்களுமே நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று நடைபெறப்போகும் போட்டிகளைப் பற்றிய அப்டேட்ஸ் இங்கே.
சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பான FIA அமைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், நேற்றைய நாளில் போட்டிகள் எதையும் நடத்தவில்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட தொடக்கவிழா மட்டுமே நடந்திருந்தது. அவர் கொடியசைத்து தொடங்கி வைத்ததை தொடர்ந்து வீரர்கள் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். இரவு 11 மணி வரைக்கும் பயிற்சி நடந்திருந்தது. போட்டியை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் வெறும் பயிற்சியை மட்டுமே கண்டு சென்றனர்.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று போட்டிக்கான அட்டவணை வெளியாகியிருக்கிறது. அதன்படி காலை 10 மணியிலிருந்தே ரேஸுக்கான நடைமுறைகள் தொடங்குகிறது. 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரைக்கும் ரேஸ் டிராக்கை பரிசோதனை செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளையெல்லாம் உறுதி செய்யும் விஷயங்களையும் தகுதிச்சுற்றையும் நடத்தவிருக்கின்றனர். இதன் பிறகு மதியம் 1:20 மணியிலிருந்து ரேஸை தொடங்கவிருக்கின்றனர். F4, IRL, JK FLGB 4 என மூன்றுவிதமான ரேஸ்களை நடத்தவிருக்கின்றனர். இரவு 10:15 வரைக்கும் ரேஸ்கள் நடக்கவிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 8 மணி நேரத்திற்கு ரேஸ் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இடையில் 6:00 மணியிலிருந்து 7:15 மணி வரைக்கும் கார்களை வைத்து ஸ்டன்ட் ஷோவும் நடத்தவிருக்கின்றனர். பைக் பந்தய வீராங்கனைகளும் ஒரு ரைட் ஷோவை நடத்துகின்றனர். நேற்று ரேஸ் நடைபெறாத நிலையில் ஸ்டன்ட் ஷோவை நடத்தித்தான் ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தனர்.
இந்த அட்டவணையும் இறுதி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்றே கூறியிருக்கின்றனர். எனவே நிலைமையைப் பொறுத்து இந்த அட்டவணையில் மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தினர் நேற்றைய நாளில் ரேஸை நடத்த முடியாததால் இன்று ரேஸை வெற்றிகரமாக நடத்திவிட வேண்டும் என உறுதியாக இருக்கின்றனர்.