தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, இடையாத்தி வடக்கு கிராமத்தில், அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழுதடைந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கன்வாடி மையம் இருந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கும், அதே போல் குடி நீருக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இதற்கான பணிகளை தொடங்குவதற்கான முயற்சியில் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டபோது அரசுக்கு சொந்தமான அந்த இடம் தனி நபரின் பெயரில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
’எவ்வளவு தைரியமாக அரசு இடத்தை ஆட்டைய போடுவதற்கு உதவியாக இருந்து பட்டா போட்டும் கொடுத்துள்ளார் வி.ஏ.ஓ’ என கொந்தளித்தனர். இது தொடர்பாக, பேராவூரணி யூனியன் ஆணையர் மற்றும் கிராம மக்கள் சார்பில், முறைகேடாக அரசு இடத்தை பட்டா மாற்றம் செய்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் பிரியங்க பங்கஜத்திடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ ஜெயஸ்ரீ விசாரணை நடத்தினர். இதில், அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி இடத்தை, அதே ஊரைச் சேர்ந்த தனி நபரான ராமசாமி என்பவருக்கு வி.ஏ.ஓ செல்வராஜ் பட்டா மாற்றம் செய்து கொடுத்ததும், அதற்கு உதவியாக தலையாரி அன்பழகன் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ராமசாமி அந்த இடத்தை தனது மகன் துரைமாணிக்கம் பெயரில் தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ ஜெயஸ்ரீ, வி.ஏ.ஓ செல்வராஜ் மற்றும் தலையாரி அன்பழகன் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தஞ்சாவூர் வருவாய்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிலரிடம் பேசினோம், “பேராவூரணி யூனியன் ஆணையர் பெயரில் இருந்த அரசுக்கு சொந்தமான இடத்தை தனி நபருக்கு பட்டா போட்டு கொடுத்திருக்கிறார் வி.ஏ.ஓ. இதில் வேடிக்கை என்னவென்றால் முறையான ஆவணங்கள் இல்லாத நிலையிலும் திருவோணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர், எழுத்தர் இருவரும் சேர்ந்து பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். வி.ஏ.ஓ. தலையாரி மட்டுமின்றி சாட்சி கையெழுத்து போட்டவர்கள் உள்பட இந்த முறைகேட்டில் எட்டு பேருக்கு தொடர்புள்ளது. முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் இருவரும் மீதும் மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மற்றவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.