தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தனியார் நிறுவனமும் இணைந்து சென்னையில் F4 கார் பந்தயத்தை நடத்தவிருக்கிறது.
இன்றும், நாளையும் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தபோதும், அதையெல்லாம் தாண்டி இந்தப் பந்தயத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தவுள்ளது.
இந்த கார் பந்தயத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இங்கே!
*3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இந்த கார் பந்தயம் நடத்தப்படுகிறது. அந்தவகையில் தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு சாலைகளில் நடைபெற இருக்கிறது. இன்றும், நாளையும் இந்தப் போட்டிகள் அங்கு நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
* இந்த கார் பந்தயத்தை பொறுத்தவரை இரண்டு விதமான போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஒன்று IRL என்று சொல்லக்கக்கூடிய இந்தியன் ரேசிங் லீக். இது IPL மாதிரியான ஒரு லீக்தான். இந்த பந்தயம் மதியம் முதல் நடைபெற இருக்கிறது. இந்தப் பந்தயத்தில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.
* இரண்டாவது F4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம். F1 கார் ரேஸ் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அதன் ஒரு பகுதிதான் இந்த F4 கார் பந்தயம். இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்படும்.
கார் பந்தயப் போட்டிகளை எதில் பார்க்கலாம்?
* ‘STAR Sports Select’ சேனலில் இந்த கார் பந்தயப் போட்டிகளைப் பார்க்கலாம். அல்லது FanCode என்ற App-ல் பார்க்கலாம். பொதுமக்கள் நேரில் சென்றும் பார்க்க முடியும். அதற்கான டிக்கெட்டை Paytm Insider மூலம் பெற்றுக்கொள்ளலாம். அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத் திடல் என 8 இடங்களில் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்காக, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான வளாகம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன ?
* பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது. அதையும் மீறி பொருட்களை எடுத்துவந்தால் அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும். திரும்பத் தரப்படமாட்டாது. பிளேடுகள், கத்திகள், கத்திரிகோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
மழை பெய்தாலும் ரேஸ் நடக்குமா?
* மழை பெய்தாலும் அந்த ஈரப்பதமான சூழலிலும் ஓட்டும் அளவுக்கான சக்தியுடைய கார்களைத்தான் வீரர்கள் பயன்படுத்தவிருக்கின்றனர். அதனால் மழை பெய்தாலும் போட்டிகள் திட்டமிட்டபடியே நடக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41