தஞ்சாவூர் மாவட்டம் கடம்பங்குடி, ஐம்பதுமேல்நகரத்தை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2017 – 18 ம் ஆண்டுக்கு நெல்லுக்கான பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்தனர். விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டும், விவசாயிகளான இளமுருகன், செல்லப்பொண்ணு, துரைராஜ், சுப்பிரமணியன், சிதம்பரநாதன், நாராயணசாமி, இந்திரா, கண்மணி, மதியழகன், சுதாகர், பாலமுருகன் ஆகிய 11 விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் கரூர் மாவட்ட குறைதீர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற தலைவர் பாரி, உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் வழக்கை விசாரித்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ. 57,375 மற்றும் சேவை குறைபாட்டால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.10,000 மற்றும் வழக்கு செலவுத்தொகையாக 5,000 என ரூ. 72,375 தலா 11 விவசாயிகளுக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மொத்த தொகை ரூ. 7.96 லட்சம். இதற்கான ஆணையை தஞ்சாவூர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில், வக்கீல் ஜீவக்குமார் தலைமையில், விவசாயிகள் பெற்றுக்கொண்டனர். இது குறித்து சமூக ஆர்வலரான ஜீவக்குமாரிடம் பேசினோம், “2017-18ம் ஆண்டுக்கு நெல் பயிருக்கு விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்தில் பிரீமியம் தொகை செலுத்தியிருந்தனர். பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கியது.
இதில் 11 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. விளைச்சல் பாதிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் இருந்தும் காப்பீட்டு நிறுவனம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியது. இதைத்தொடர்ந்து நியாயமாக வழங்க வேண்டிய இழப்பீட்டை கேட்டு வழக்கு தொடர்ந்தோம். அதன் பிறகு வந்த கொரோனா பெருந்தொற்று காலங்களிலும் குறிப்பிட்ட விவசாயிகள் பாதிப்பை சந்தித்த போதிலும் வழக்கை விடாமல் நடத்தினர். இந்த நிலையில் ஆறு வருடங்களுக்கு பிறகு பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட அந்த விவசாயிகளுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செலுத்திய பிரிமீயம் தொகை எங்களுக்கு வர வில்லை என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது விவசாயிகளின் உண்மையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88