திருச்சி மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையைத் தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி மாவட்டம், முக்கொம்பு பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமாரின் தனிப்படை போலீஸார் அப்பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது, அவ்வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில் அதில் 20 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் இருந்துள்ளது. அதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த காரில் குட்கா பொருள்களை கடத்தி வந்த திருச்சி லால்குடியை சேர்ந்த மணிராஜ் மற்றும் திண்டுக்கலைச் சேர்ந்த தங்க மாயன் ஆகிய இருவரை பிடித்து அவர்களை ஜீயபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை கைது செய்த ஜீயபுரம் போலீஸார் அவர்கள் இருவரிடமிருந்து ரூ.96,420 பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் ரொக்க பணம் குறித்து சரிவர கணக்கு காட்டவில்லை என திருச்சி எஸ்.பி-க்கு புகார் சென்றுள்ளது. அதனடிப்படையில் விசாரணை செய்த எஸ்.பி வருண்குமார் ஜீயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன், தலைமை காவலர் சரவணன், காவலர்கள் சத்தியமூர்த்தி, அருள்முருகன், ரகுபதி ஆகிய 5 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் பணத்தை குறைவாக கணக்கு காட்டியதாக ஆய்வாளர் உள்ளிட்ட 5 போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.