தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துவதற்காக அனுமதி கேட்டு விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி-யிடம் மனு கொடுத்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். செப்டம்பர் 23 ஆம் தேதியை மாநாட்டுக்கான தேதியாகத் தீர்மானித்திருக்கிறார்கள் அக்கட்சியினர். கடந்த ஒரு மாதமாக விஜய்யின் த.வெ.க மாநாடு அங்கே நடக்கிறது, இங்கே நடக்கிறது என்கிற செய்திகள் வந்தவாறே இருந்தன. இந்நிலையில், விக்கிரவாண்டியை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைப் பற்றிய பின்னணியை விசாரித்தோம்.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடந்த கட்சிக்கொடி அறிமுக விழாவிலேயே, ‘மாநாடுக்கான தேதியை விரைவில் அறிவிப்பேன்.’ என விஜய் தெரிவித்திருந்தார். நாம் விசாரித்தவரைக்கும் செப்டம்பர் 22 அல்லது 25 ஆம் தேதியில் மாநாடு நடத்த வாய்ப்பிருப்பதாகத் தகவல் கிடைத்திருந்தது. ஆனால், இப்போது இடைப்பட்ட 23 ஆம் தேதியான திங்கள் கிழமையை மாநாடுக்கான நாளாகக் குறித்திருக்கிறார்கள். இதற்கு ஜோதிட காரணங்களும் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தேதியைக் கடந்து இடம் தேர்வு செய்வதிலும் த.வெ.க-வினர் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டிருந்தனர்.
இவற்றையெல்லாம் பற்றி த.வெ.கவின் நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். “மாநாட்டை எங்கே நடத்தலாம் என ஆலோசித்தபோது முதல் சாய்ஸாக திருச்சியே இருந்தது. தென்மாவட்டங்களிலோ மேற்கு மாவட்டங்களிலோ மாநாட்டை நடத்துவதை விஜய்யே விரும்பவில்லை. எல்லா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் சிரமமின்றி வந்து சேரும் வகையில் மத்திய மாவட்டமான திருச்சியில்தான் மாநாட்டை நடத்த வேண்டும் என உறுதியாக இருந்தார்.” என்கின்றனர். இடையில் ஒரு டீம் புகுந்து திருச்சியில் மாநாடு நடத்திய சில கட்சிகள் இப்போது தேய்ந்து காணாமலே போய்விட்டன அதனால் செண்டிமெண்டாக திருச்சி வேண்டாமே என விஜய்க்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். விஜய்யுமே இதன்பிறகு கொஞ்சம் யோசித்திருக்கிறார்.
குழப்பத்திலிருந்த விஜய்யிடம், ‘எம்.ஜீ.ஆர் அதிமுகவின் முதல் பொதுக்கூட்டத்தையும் மாநில மாநாட்டையும் திருச்சியில்தான் நடத்தினார். திண்டுக்கல் இடைத்தேர்தலுக்காக திருச்சியில் கூட்டம் நடத்திதான் எம்.ஜீ.ஆர் நிதி திரட்டினார். எம்.ஜீ.ஆருக்குப் பெரும் புகழைக் கொடுத்த சத்துணவு திட்டத்தை திருச்சியில் மாநாடு நடத்திய இடத்தில்தான் தொடங்கி வைத்தார்.’ என முக்கிய நிர்வாகிகள் டேட்டாவோடு சென்றிருக்கின்றனர். இந்த எம்.ஜீ.ஆர் செண்டிமெண்ட்டில் விஜய் மனம் குளிர்ந்துவிட்டாராம்.
உடனே திருச்சிக்கு தம்ப்ஸ் அப்பும் காட்டியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்திய சிறுகனூரில் இடத்தை வாடகைக்குப் பேசியும் முடித்திருக்கிறார்கள். ஆனால், மழைப் பெய்தால் அந்த இடம் சகதிக்காடாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல நூறு ஏக்கர் கொண்ட அந்த இடத்தை முழுமையாக மேற்கூரை அமையும்படி செட் அடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், செட் அமைக்கும் குழுவினர் பணியை முடிக்க மூன்று மாதங்கள் ஆகும் எனக் கூறியிருக்கிறார்கள். இதற்கிடையில் நிலத்தின் உரிமையாளரும் சில அழுத்தங்களால் பின் வாங்கியிருக்கிறார். இதனால் விஜய்யும் கடும் அப்செட் ஆகியிருக்கிறார். திருச்சி இல்லையென்று ஆனவுடன்தான் சேலம், ஈரோடு எனப் பல இடங்களையும் தேடி அலைந்திருக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் எதோ ஒரு முட்டுக்கட்டை! இறுதியில்தான் வழியே இல்லாமல் விக்கிரவாண்டியை லாக் செய்திருக்கிறார். விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டுக்கு அருகே இருக்கும் ‘வி சாலை’யில் மாநாட்டை நடத்தலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘மாநாடு நடைபெறும் பகுதி மட்டும் 85 ஏக்கருக்கு இருக்கிறது. இதுபோக 40 ஏக்கர், 28 ஏக்கர், 5 ஏக்கர் என ஒவ்வொரு பகுதியிலும் வாகனம் நிறுத்தவும் பக்காவாக இடம் இருக்கிறது.’ என்கிறார்கள் சில நிர்வாகிகள். திருச்சியில் நடந்திருந்தால் இன்னும் பிரமாண்டமாகவும் இருந்திருக்கும் செண்டிமெண்ட்டாகவும் இருந்திருக்கும் என்பதை தவிர வேறு எந்த வருத்தமும் விஜய் தரப்புக்கு இல்லையாம்.
மாநாட்டுக்கான அனுமதியைப் பெற்று எல்லாமும் உறுதியான பிறகுதான் நிர்வாகிகளுக்கே அனைத்து தகவல்களையும் கூட்டம் வைத்து அறிவிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்களாம் தலைமை நிர்வாகிகள். இடையில் எதாவது சறுக்கல்கள் நிகழ்ந்து யாருக்கும் அதிருப்தி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இதனால் முக்கிய நிர்வாகிகள் சிலரை தவிர மற்ற மாவட்ட தலைவர்களுக்கே மாநாட்டைப் பற்றிய அப்டேட்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
இதுதொடர்பாக த.வெ.க செய்தித்தொடர்பாளர் ஜெகதீஸ்வரனிடம் பேசினோம். “மாநாடு பற்றி கட்சித் தலைமையே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இப்போதிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் பற்றியும், கட்சியின் கொள்கைகளைப் பற்றியும் விரிவாக மாநாட்டில் தலைவர் கட்டாயம் பேசுவார். இந்த மாநாட்டிற்குப் பிறகு த.வெ.க தான் தமிழ்நாட்டு அரசியல்களத்தில் பேசுபொருளாக இருக்கும்.” என்றார் உறுதியாக.
அதேபோல், விழுப்புரம் காவல்துறையிடமிருந்து அனுமதி கிடைத்த பிறகே த.வெ.க முகாமில் பரபரப்பு தொற்றிக்கொள்ள ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.