கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் பா.ஜ.க ஆர்.எஸ்.புரம் பகுதி இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு அந்த அலுவலகத்துக்குள் நான்கு பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளனர்.
அவர்கள் சதீஷ்குமாரை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், சதீஷ்குமாரின் இரண்டு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில்அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எரியூட்டி வேலு மற்றும் சரவணன் ஆகிய இருவரை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நிதி நிறுவனத்துக்கும், சதீஸ் பணிபுரிந்து நிதி நிறுவனத்துக்கும் முன்பகை இருந்துள்ளது.
இதில் இருவருக்கும் அவ்வப்போது மோதல் இருந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்தச் சம்பவமும் நடந்துள்ளது என போலீஸார் கூறியுள்ளனர்.