Ukraine: `நோய்வாய்ப்பட்ட முதியவரின் அச்சுறுத்தல் எங்களிடம் பலிக்காது…’ – புதினைச் சாடிய ஜெலன்ஸ்கி

அரசு முறைப் பயணமாக உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி , ‘ரஷ்யா உக்ரைன் போர், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து தனிநாடாக உக்ரைன் பிரிந்து அறிவித்துக்கொண்ட ஆகஸ்ட் 24-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமாக உக்ரைன் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு 33-வது சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “உக்ரைனின் ​​புதிய ஆயுதமான பாலியான்ட்சியா, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியிருக்கிறது.

ஜெலன்ஸ்கி

இந்த ஏவுகணை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை விட வேகமானது, சக்திவாய்ந்தது. ரஷ்யாவில் ஒரு இலக்கின் மீது வெற்றிகரமான தாக்குதலுக்கு உக்ரேனின் புதிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. ரஷ்யாவில் இருக்கும் ஒரு நோய்வாய்ப்பட்ட முதியவர் தொடர்ந்து அனைவரையும் அச்சுறுத்துகிறார். ஆனால் அவரின் அச்சுறுத்தல் நம்மிடம் பலிக்காது.

எங்கள் சில நட்பு நாடுகள் துரதிஷ்டவசமாக இந்தப் போர் குறித்த முடிவுகள் எடுக்க தாமதப்படுத்துவதால், ​​பாலியான்ட்சியா உட்பட எங்கள் புதிய ஆயுதங்களை செயல்படுவதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது. இந்தப் புதிய ஆயுதத் தாக்குதல் குறித்து முடிவெடுக்க ரஷ்யாவிற்கு மிகவும் கடினமாக இருக்கும். சரியாக என்ன ஆயுதம் தாக்கியது என்பதை கணிப்பது கூட கடினம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.