`முதல்வன் படம்; பெரியவர் ஆண்டுகொண்டிருக்கிறார் என்று மறுத்துவிட்டார் ரஜினி!’ – அமைச்சர் எ.வ.வேலு

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி குறித்து, திமுக அமைச்சர் எ.வ.வேலு `கலைஞர் எனும் தாய்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இதன் புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இதில், முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், `தி இந்து’ என்.ராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ரஜினி – ஸ்டாலின்

அதைத்தொடர்ந்து, புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட ரஜினிகாந்த் அதைப் பெற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய தி இந்து என் ராம், “அரசியல் வரலாற்றில் கலைஞர் ஏற்படுத்திய சாதனைகளை எதிர்காலத்தில் சமமாக்குவது கடினம். 5 முறை முதல்வர், 50 ஆண்டுகள் தி.மு.க தலைவர், போட்டியிட்ட 13 முறையும் சட்டமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்டவர். அரசியலில் கலைஞர் சாதித்ததை எட்டிப்பிடித்தவர்கள் என இந்திய அரசியலில் யாரும் இருக்க முடியாது. மாநில அரசியலில் அவர் கவனம் செலுத்தினார். ஆனால், வேறு தலைவர்கள் பிரதமர் பதவியைப் பிடிக்க முயற்சித்தார்கள்.

தி இந்து என் ராம்

மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது அவரின் உறுதியான கொள்கைகள். அனைத்து துறைகளிலும் கோலோச்சினார். பத்திரிகை சுதந்திரத்துக்கு பெரிய காப்பாளராக இருந்தார். இந்த நூல் தாய் எனும் தலைப்பில் வந்தது மிகப் பொருத்தமான தலைப்பு. தாய் மாக்சிம் கார்க்கியின் பிரபலமான நாவல். இந்த நாவல் குறித்து, `நேரத்துக்கு ஏற்ற புத்தகம்’ என்று லெனின் பாராட்டியதை கார்க்கி குறிப்பிட்டிருக்கிறார். இங்கு இருப்பவர்களில் இருவர் கண்டக்டர்களாக இருந்தவர்கள். ஒரு கண்டக்டர் சூப்பர் ஸ்டார், இன்னொரு கண்டக்டர் மாண்புமிகு அமைச்சர் (எ.வ.வேலு)” என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், “தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்களுக்கும் தாயாக விளங்கியவர் கலைஞர். கருப்பையைச் சுமந்திருக்கிற பெண்கள்தான் தாயாக முடியும். ஆனால், இதயத்தில் கருணையைச் சுமந்தால் ஆணும் தாயாக முடியும் என்பதற்கான அடையாளம்தான் தாயுமானவர். அப்படித் தன் வாழ்நாளெல்லாம் ஏழைகளுக்காக இதயத்தில் கருணையைச் சுரப்பவராக கலைஞர் விளங்கினார்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

ஒரு தாயின் பிரசவத்துக்காக தாயுமானவர் தோன்றினார். உலகத்திலுள்ள ஒரு உயிரும் மடிந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்முதலாக 108 ஆம்புலன்ஸ் வசதியைக் கலைஞர் ஏற்படுத்தினார். அமைச்சர் எ.வ.வேலுவை பொதுப்பணித்துறை அமைச்சராக, உணவு பாதுகாப்புத்துறை அமைச்சராக நாம் பார்த்திருக்கிறோம். இன்று இலக்கிய உலகத்திலும் தன்னிகரற்றவராகியிருக்கிறார். கலைஞர் இருந்திருந்தால், தாயன்போடு இதனை மகிழ்ந்திருப்பார்” என்று உரையாற்றினார்.

எ.வ.வேலு பேசுகையில், “கலைஞர் எனும் தாய் என்ற புத்தகத்தை எழுதுவதற்கு உந்து சக்தியாக இருந்தது, ஒன்று நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் `மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை நான் படித்தேன், ஓர் இனிமையை பெற்றேன்’ என கலைஞர் எழுதியிருந்தார். அதற்குப் பின் எனக்கும் அதை படிக்கச் வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது, இதற்கு அதுவும் ஒரு காரணம். 11 ஆண்டுகளாக அரசுப்பணிகள், கழகப் பணிகள் இல்லாதபோது பல்வேறு புத்தகங்களில் குறிப்பெடுத்து ஒரு இலக்கை அமைத்துக்கொண்டு எழுதினேன். தமிழை வளர்த்த பெருமை பக்தி இலக்கியங்களுக்கு உண்டு. பிற்பாதியில் திராவிடம் தமிழை வளர்த்தது. கலையுலகத்தின் காந்தம் சூப்பர் ஸ்டார் ரஜினி. முதல்வன் படத்தில் ரஜினியை நடிக்க ஒரு முயற்சி நடந்தது. அப்போது அவர், `தமிழ்நாட்டை பெரியவர் ஆண்டுகொண்டிருக்கிறபோது அதில் நடிக்க உடன்பாடு இல்லை’ என்று மறுத்துவிட்டார். அதற்கு நன்றி.” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88