கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துக்கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்றுவந்தார், பெண் மருத்துவர் ஒருவர். வழக்கம் போல அவர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். வேலையை முடித்துவிட்டு அதிகாலை 3 மணியளவில் அவர் உறங்கச் சென்றிருக்கிறார். மறுநாள் காலையில் அவர் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். அந்த உடல் அரைநிர்வாண கோலத்திலும், பலத்த காயங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. பிறகு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது “உயிரிந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும், கழுத்து, கால்கள் முறிக்கப்பட்டு மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த சூழலில்தான் பிரேத பரிசோதனை செய்த சுபர்னா கோஸ்வாமி சில தகவல்களை வெளியிட்டு பகீர் கிளப்பினார். அவர் பேட்டியில், “பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்தோம். அவரின் பிறப்புறுப்பில் 150 மி.லி அளவுக்கு விந்து இருந்தது. ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்திருந்தால், இந்த அளவுக்கு விந்து இருப்பதற்கு சாத்தியமில்லை. இது கூட்டுப் பாலியல் வன்கொடுமையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது” என்றார். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறையுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதற்கிடையில், இந்த வழக்கை கொல்கத்தா போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. சாட்சியங்களை அழிக்க முயற்சிகள் நடக்கின்றன என்கிற சர்ச்சையும் வெடித்துக் கிளம்பியது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கொல்கத்தா போலீஸாரின் செயல்பாட்டுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் `வழக்கு விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. அதன்படி விசாரணை சி.பி.ஐ வசம் சென்றது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தசூழலில் சஞ்சய் ராய் மட்டும் இல்லாமல் மேலும் பலருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்கிற தகவலும் வெளியானது. அதன் ஒருபகுதியாக உயிரிழந்த பெண்ணுடன் பணியாற்றிய 5 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், “பெண் மருத்துவர் கொல்லப்பட்ட தகவல் போலீஸுக்கு கிடைத்த பின்பும் 11 மணி நேரம் என்ன நடந்தது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க போலீஸார் பின்பற்றிய நடைமுறையை 30 ஆண்டுகால எனது அனுபவத்தில் கண்டதில்லை. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக வழக்கு பதியும் முன்பே உடற்கூறாய்வு நடத்தப்பட்டது எப்படி?. சந்தேக மரணம் என்று வழக்கு பதியும் முன்பே உடற்கூறாய்வு நடத்தப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.
ஆக.9-ம் தேதி காலையில் போலீஸ் டைரியில் பெண் மருத்துவர் கொலை பற்றி குறிப்பு பதியப்பட்டு உள்ளது. எனினும் இரவு 11.45 மணிக்குத்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதானா?. காலை 10.10 மணிக்கு கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை பற்றி போலீஸ் பொது டைரியில் குறிப்பு பதியப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தை போலீஸ் தன் கட்டுப்பாட்டில் இரவு 11.30 மணிக்குத்தான் கொண்டு வந்துள்ளது. காலை 10.10 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை என்ன நடந்தது” என்று கேள்வியெழுப்பியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு ‘உயிரிழந்த பெண்ணின் தந்தையின் அனுமதி இல்லாததால் தான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது’ என கொல்கத்தா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தசூழலில் மாணவியின் மரண வழக்கு மட்டும் அல்லாது மருத்துவமனையில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாகவும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சூழலில்தான் சஞ்சய் ராய்யை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சஞ்சய் ராய்யிடம், ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏன் ஒப்புக்கொண்டீர்கள்’ என, நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது. அதற்கு அவர், “நான் நிரபராதி. என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. ஒருவேளை இந்த சோதனை அதை நிரூபிக்கும்” என தெரிவித்திருக்கிறார். அதோடு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் 4 டாக்டர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அடுக்கடுக்கான மர்மங்கள் சூழ்ந்திருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88