கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பிரிய முருகன். இவரின் மனைவி திலகவதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பிரிய முருகன், நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே கேசவநேரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர், கடந்த 3 ஆண்டுகளாக 2 லாரிகளை சொந்தமாக வாங்கி, வாடகைக்கு விட்டும் வந்தார். இவரிடம் கடந்த சில மாதங்களுக்குன் முன்னர் வள்ளியூர் அருகேயுள்ள நம்பியான்விளையைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் டிரைவராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதனால், பிரிய முருகனும், இன்னொரு லாரியை வசந்தகுமாரும் ஓட்டி வந்தனர்.
வசந்தகுமார், லாரியின் வாடகைப் பணத்தை சரவர கொடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், அவரை ஒரு மாதத்திற்கு முன்பு பிரிய முருகன், வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதில், வசந்த குமாருக்கு சம்பள பாக்கி ரூ.13,500-ஐ கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பணத்தை பலமுறை கேட்டும் பிரியமுருகன் சம்பள பாக்கியை கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இந்த நிலையில், வசந்தகுமார் தான் பைனான்ஸில் பணம் வாங்கியிருப்பதாகவும், பைனான்ஸ்காரர்கள் பணம் கேட்டு தன்னை தொல்லை படுத்துவதால் சம்பள பாக்கி குறித்தி பைனான்ஸ் நிறுவனத்திடம் அவகாசம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த பிரிய முருகன், நேற்று இரவு தினேஷ் என்பவரது பைக்கிலும், வசந்தகுமார் இன்னொரு பைக்கிலும் பைனான்ஸ் நிறுவனத்தினரை சந்திக்கச் சென்றனர்.
அப்போது நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வள்ளியூர் அருகேயுள்ள ஊத்தடி பெரியகுளம் கரை அருகேயுள்ள காட்டுப்பாதையில் பைக்கில் சென்ற போது சம்பள பாக்கி தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரிய முருகனை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். தினேஷ் அளித்த தகவலின் அடிப்படையில் வள்ளியூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். தப்பியோடிய வசந்தகுமாரை கைது செய்தனர்.
அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “ஒன்றரை மாதங்களாக எனது சம்பள பாக்கியை கேட்டு வந்தேன். ஆனால், பிரியமுருகன் தருவதாகத் தெரியவில்லை. எனக்கு கடன் கொடுத்தவர்களும் பணத்தைக் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். பைனான்ஸ்காரர்களிடம் எனது நிலைமையை பேசி புரிய வைக்கத்தான் அவரை அழைத்துச் சென்றேன். பைக்கில் செல்லும் போதே சம்பள பாக்கி தொடர்பாக வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88