வக்ஃபு வாரிய திருத்த மசோதா: பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தரப்பிலும் எதிர்ப்பு… நடப்பது என்ன?!

இந்தியாவில், பாதுகாப்புத் துறை, ரயில்வே துறை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிபதியான நிலங்களை வக்பு (Waqf) வாரியம்தான் கொண்டிருக்கிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறிருக்க, அதன் சொத்துகளைக் கண்காணிப்பதற்காக 1954-ல் வக்ஃபு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1958-ல் அனைத்து மாநிலங்களிலும் வக்ஃபு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து, வக்ஃபு சட்டதிலிலுள்ள விதிகளின்படி வக்ஃபு வாரிய சொத்துகள் கண்காணிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

வக்பு வாரியம்

இவ்வாறிருக்க, இந்த மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, வக்ஃபு (திருத்தம்) மசோதா, 2024-ஐ தாக்கல் செய்தார். அதில், `முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் வக்பு வாரியத்தில் இடம்பெறச் செய்வது, வக்ஃபு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரம் கூடுதல் ஆணையரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது’ உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன.

கிரண் ரிஜிஜு

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது மதச் சுதந்திரத்தில் தலையிடும் செயல் என பல்வேறு கருத்துகளை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்த திருத்த மசோதா ஆய்வு செய்யும் வகையில் பா.ஜ.க எம்.பி ஜகதாம்பிகா பால் தலைமையில் ஒவைசி, ஆ.ராசா உட்பட 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அதேமயம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சிராக் பாஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வக்ஃபு திருத்த மசோதா குறித்து கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவ்வாறிருக்க, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில், என்.டி.ஏ அரசில் அங்கம் வகிக்கும் சிராக் பஸ்வான், சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து மூன்றாவதாக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாக, பீகார் ஐக்கிய ஜனதா தளம் அரசில் மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜமா கான், நேராக முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்து, திருத்த மசோதாவில் இருக்கும் சில அம்சங்களைக் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதேபோல், நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவராக அறியப்படும் மாநில நீர்வளத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி, இதில் முஸ்லீம் சமூகத்தின் அச்சம் குறித்து பேசியிருக்கிறார்.

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்

இவர்கள் மட்டுமல்லாது, ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ குலாம் கவுஸ் உட்பட கட்சியின் பல தலைவர்களும், இதில் தங்களின் சந்தேகங்களை வெளிப்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜமா கான் ஆகியோர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை நேரில் சந்தித்திருக்கின்றனர். இது கூட்டணி அரசில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 30-ம் தேதி நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88