விட்டு விட்டு பெய்யும் மழை… தண்ணீரில் நெற்பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் கொட்டித் தீர்த்த மழையால் குளங்கள், கிணறுகளில் தண்ணீர் பெருகியது. அதே நேரத்தில் விளை நிலங்களில் குளம்போலத் தண்ணீர் தேங்கியதால், மானூர் தாலூகா பல்லிக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டிருந்தனர்.

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

அருகிலுள்ள பள்ளமடை, பெரியகுளம் நீர்ப் பாசனத்தில் நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்தன. அறுவடைக்குத் தயாரக இருந்த நிலையில், சில நாள்களாகப் பெய்த கனமழையினால் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேதமடைந்த பகுதிகளில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளமடை பெரியகுளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சேகர், “இந்த பெரியகுளம் நீர்ப் பாசனப் பரப்பில் பிசான 2-ம் பூ சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தது. இன்னும் 5 முதல் 10 நாள்களில் அறுவடைப் பணியைத் தொடங்கலாம் என திட்டமிட்டிருந்தோம்.

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி தற்போது முளை விட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து பயிர் வைத்தோம். மழைக்கு தண்ணீரில் மூழ்கியதால், விவசாயிகளுக்குப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் போதிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.