கள்ளர் சமூகத்தினர் அதிகளவில் இருக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் இருக்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், பள்ளி கல்வித்துறையுடன் இணைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகச் சமீபத்தில் பேச்சுக்கள் அடிபட்டன. அதையடுத்து, மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், தமிழ்நாடு அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், அவ்வாறு வெளியான செய்திகள் தவறானவை என்றும், அப்பள்ளிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகச் சிறப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் 299 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு வழங்கி வருகிறது. மேலும், திறன்மிகு வகுப்பறைகள், இலவச மருத்துவப் பரிசோதனைகள், ஆங்கில வழிக் கல்வி போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், இப்பள்ளிகளைப் பள்ளி கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானதாகும். இப்பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தனித்துவத்தோடு இயங்கி வரும் சூழ்நிலையில், அவற்றை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எனவே, இப்பள்ளிகளைப் பள்ளி கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானதும் மற்றும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88