`வேலை செய்யாதவர்களுக்கும் பணம்’ 100 நாள் வேலை திட்ட முறைகேட்டில் ஆதங்கப்பட்ட நீதிபதிகள்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தேனி மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

100 நாள் வேலைத்திட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், “ஊரகப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மூலமாக 100 நாள் வேலை திட்டத்திற்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேனி, பழையகோட்டை ஊராட்சியில் 2020-21-ம் ஆண்டுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

ஊராட்சித் தலைவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். ஆண்டிப்பட்டி திட்ட மேம்பாட்டு அலுவலரும், அவருடன் இணைந்து பணியாளர்களின் வருகை பதிவேட்டை மறைத்துவிட்டனர்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

வேலை பார்க்காத பலரது பெயர்களை குறிப்பிட்டு ஊதியம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, தேனி மாவட்டம், பழையகோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பழையகோட்டை ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரை மாற்றிவிடலாம்’ என்று ஆதங்கப்பட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேனி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.