அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில், அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸும் – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் எதிரெதிராக தேர்தல் களம் காண்கின்றனர். இந்த நிலையில், இறுதிக்கட்டப் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் இறுதி நாளான நேற்று அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உரையாற்றினார்.
அப்போது, அம்மா ஷியாமலா கோபாலன், தன்னை வளர்த்தது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், “அமெரிக்கா, சமீப வாரமாக என்னை அழைத்துச் செல்லும் பாதை நான் எதிர்பாராதது என்பதில் சந்தேகமில்லை. என் வாழ்வில் நான் எதிர்பாராதது நடப்பது ஒன்றும் புதிதல்ல. என் அம்மா ஷியாமலா ஹாரிஸை தினமும் மிஸ் செய்கிறேன்… குறிப்பாக இப்போது. எனக்கு தெரியும் என் அம்மா வானிலிருந்து இதைப் பார்த்து புன்னகைப்பார். என் அம்மா ஒரு புத்திசாலித்தனமான, ஐந்தடி உயரமுள்ள, பழுப்பு நிறப் பெண். மூத்த குழந்தையாக பிறந்த ஒரு பெண்ணை உலகம் எப்படி நடத்தும் என்பதை நான் பார்த்து புரிந்தேன்.
ஆனால் என் அம்மா ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் கடினமானவர், தைரியமானவர், பெண்களுக்கான போராட்டத்தில் ஒரு முன்னோடியாக இருந்தார். எனக்கும் மாயாவுக்கும், ‘அநீதியைப் பார்த்து பயப்படாமல், அதை எதிர்த்து ஏதாவது செய்யுங்கள்’ எனப் பாடம் கற்றுக் கொடுத்தார். என் அப்பா சிரித்துக்கொண்டே ‘ஓடு கமலா ஓடு, எதற்கும் பயப்படாதே’ எனக் கூறுவார். அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்துகிறேன்.
மக்கள் சார்பாகவும், ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாகவும், எங்கள் கட்சி, என் அம்மாவின் சார்பாகவும், சாத்தியமற்ற பயணத்தை மேற்கொண்ட அனைவரின் சார்பாகவும், நான் வளர்ந்ததைப் போல வளர்ந்த மனிதர்கள் சார்பாகவும், தங்கள் கனவுகளைத் துரத்த கடினமாக உழைக்கும் மக்கள் சார்பாகவும், அனைவரின் சார்பாகவும், அமெரிக்காவுக்கான உங்கள் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது முழு வாழ்க்கையிலும் எனக்கு ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டுமே. அவர்கள் தான் மக்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.