தன் மகன் படித்த அரசுப்பள்ளியில் ஊதியம் வாங்காமல் கட்டடப் பணி செய்த தந்தையின் செயலை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அவரைப் பாராட்டி மரியாதை செய்த சம்பவம் மேலும் ஆச்சரியமளித்துள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தில் மராமத்து பணிகளைச் செய்ய வேண்டுமெனத் தலைமையாசிரியர் தனபால், ஆசிரியர் முருகேசன் ஆகியோர் அருகிலுள்ள உத்தபுரத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர் அழகுமுருகனிடம் கேட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளியில் மராமத்து பணிகளைச் செய்துக்கொடுத்துள்ளார் அழகுமுருகன். அதன் பின்பு அதற்கான கூலியைத் தலைமையாசிரியர் வழங்கும்போது, “கூலி வேண்டாம். என் மகன் படித்த இப்பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியாக இது இருக்கட்டும்” என்று பணத்தை வாங்க மறுத்தார்.
இது குறித்து அழகுமுருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”என் மகன் பீமன் இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் டூ படித்துவிட்டு தற்போது திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி.ஏ படிக்கிறார். மகன் உயர் கல்வி கற்கக் காரணமான பள்ளிக்கு ஏதோவொரு வகையில் உதவி செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. அதனால் கூலி வாங்கவில்லை. இப்போதுதான் மனதுக்குத் திருப்தியாக உள்ளது” என்றார்.
எழுமலை பள்ளி ஆசிரியர்கள் பேசும்போது, “மாணவர் பீமன் இங்கு பிளஸ் டூ படித்தபோது விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பூச்செடிகள், மரங்களை நட்டு வளர்த்தார். இதை அறிந்த தனியார் நிறுவனம் இவரது உயர் கல்விக்கு உதவி செய்தது. அந்தளவுக்குச் சிறப்பான மாணவன். அவன் தந்தையும் இப்போது உயர்ந்துவிட்டார்.” என்றனர்.
இந்தத் தகவல் பரவியதால் பலரும் அழகுமுருகனின் செயலைப் பாராட்டத் தொடங்கிய நிலையில் பேரையூர் சென்ற மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அழகு முருகனைப் பாராட்டி பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தார்.