TVK: தடுமாறிய நிர்வாகி, தைரியப்படுத்திய விஜய்; கண்ணீரோடு புஸ்ஸி ஆனந்த் – த.வெ.க கொடி விழா ஹைலைட்ஸ்!

பனையூரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைமையகத்தில் அவரின் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் விஜய். கொடியுடன் கட்சிக்கான பாடலையும் வெளியிட்டிருந்தார். இன்று காலை நடந்திருந்த இந்த நிகழ்வின் ஹைலைட்ஸ் இங்கே…

விஜய்

* அதிகாலையிலேயே ஆஜரான நிர்வாகிகள்:

நிகழ்ச்சி காலை 9:15 மணிக்குதான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகாலையிலேயே நிர்வாகிகள் தலைமைக் கழகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அதிகாலை 5 மணியிலிருந்தே நிர்வாகிகள் நிகழ்வு நடக்கும் இடத்தில் முகாமிடத் தொடங்கிவிட்டனர்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்

ஒவ்வொரு மாவட்டத்தின் தலைவர்கள், அந்தந்த மாவட்டத்திலுள்ள அணிகளின் தலைவர்கள் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கேரளா, மும்பை மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அழைத்திருந்தனர். மொத்தமாக 250-300 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மற்ற தொண்டர்களையெல்லாம் தெருமுனையிலேயே தடுப்புகளை வைத்து தனியார் பவுன்சர்கள் மூலம் மடக்கிவிட்டனர். நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு QR கோடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். எந்த நிர்வாகியும் உள்ளே மொபைல்போனை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

* எல்லாரும் சாப்பிட்டுட்டுதான் போகணும் – விஜய் கட்டளை!

அதிகாலை 5 மணிக்கே நிர்வாகிகள் கூடிவிட்டதால் காலை 7 மணியிலிருந்தே நிர்வாகிகளுக்கான உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சி காலை 10 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. நிகழ்ச்சியை முடிக்கையில், ‘எல்லாரும் கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போகணும்!’ என விஜய் அன்புக் கட்டளையிட்டார். 11:30 மணியிலிருந்து நிர்வாகிகளுக்கு சூடான மதிய உணவும் பரிமாறப்பட்டது.

விஜய்

* ‘ஷார்ப்’ விஜய்:

காலை 9:15 மணி முதல் நிகழ்ச்சி தொடங்கும் என த.வெ.க சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. சொன்ன நேரத்திற்கு கில்லியாக வந்து சேர்ந்தார் விஜய். 9:13 மணிக்கு விஜய்யின் கார் பனையூர் அலுவலகத்துக்குள் நுழைந்தது. சரியாக 9:15 மணிக்கு தனது பெற்றோரிடம் ஆசி பெற்றுவிட்டு விஜய் மேடையேறிவிட்டார். ‘சினிமால மட்டும் இல்ல, எங்க தளபதி அரசியல்லயும் செம சின்சியரான ஆளுதான்!’ என சில நிர்வாகிகள் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

* ஒன்ஸ்மோர் கேட்ட நிர்வாகிகள்:

கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திவிட்டு கட்சிக்கான பாடலையும் விஜய் வெளியிட்டார். ‘தமிழன் கொடி; தலைவன் கொடி!’ என்கிற அந்த பாடலை கேட்டு நிர்வாகிகள் ஆர்ப்பரித்தனர். மீண்டும் மீண்டும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்க அந்த பாடல் மொத்தமாக நிகழ்ச்சியில் மூன்று முறை ஒளிபரப்பப்பட்டது.

விஜய் – புஸ்ஸி ஆனந்த்

* விஜய்யின் இருக்கை:

கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் எந்த மாணவரின் அருகே அமர்கிறார் என்பதும் பேசுபொருளானது. சமீபத்தில் நடந்த அந்த நிகழ்வில் ஒரு நாள் நாங்குநேரியின் ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரையின் அருகில் அமர்ந்திருந்தார். இன்னொரு நாளில் ஒரு திருநங்கை மாணவியின் அருகே அமர்ந்திருந்தார். தன்னை எப்போதுமே விளிம்புநிலை மக்களின் ஆதரவாளனாக காட்டிக்கொள்ளும் பொருட்டே விஜய் இப்படியாக செய்து வந்தார். இந்த கொடி அறிமுக விழாவிலும் கட்சியின் கொள்கைப்பரப்பு இணைச் செயலாளரான சிறுபான்மையினரான தாஹிராவின் அருகேயே அமர்ந்திருந்தார்.

விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா

* பெற்றோரின் வருகை:

விஜய் நிகழ்விடத்துக்கு வருவதற்கு முன்பாகவே அவரின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகரும் ஷோபாவும் காலை 8:30 மணிக்கே நிகழ்விடத்துக்கு வந்திருந்தனர். கட்சி தொடங்குவது சம்பந்தமாக விஜய்க்கும் சந்திரசேகருக்கும் கருத்து மோதல் இருந்தது அனைவரும் அறிந்ததே. ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்!’ என எஸ்.ஏ.சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையென விஜய் அறிக்கையெல்லாம் விட்டிருந்தார். அதேமாதிரி, “புஸ்ஸி ஆனந்தையே நான்தான் விஜய்யிடம் அறிமுகப்படுத்தினேன். இன்று அவரே எங்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்திவிட்டார்” என எஸ்.ஏ.சியும் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். கொடி அறிமுக நிகழ்வு இந்தக் கருத்து மோதல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி போன்று பார்க்கப்பட்டது. எஸ்.ஏ.சியையும் ஷோபாவையும் புஸ்ஸி ஆனந்ததான் வரவேற்று நிகழ்விடத்துக்குள் அழைத்து வந்தார். விழா அரங்கில் நிர்வாகிகளோடு சென்று அமர்ந்த அவர்களை அழைத்து முன் வரிசையிலும் ஆனந்தே அமர வைத்தார். விஜய்யும் பெற்றோரை கட்டியணைத்துவிட்டுதான் மேடையேறினார்.

விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா

மேடையில் பெற்றோரைக் குறிப்பிட்டு பேச மறந்த விஜய், கடைசியில் இன்னொரு முறை மேடையேறி மன்னிப்புக் கேட்டு, “தேங்க்யூ அப்பா… தேங்க்யூ அம்மா…” என நன்றியும் கூறினார்.

* நுணுக்கமாகக் கவனிக்கும் உளவுத்துறை:

நிகழ்வு நடந்த பனையூரின் அலுவலகத்தில் த.வெ.க வை தொடர்ந்து ஃபாலோ செய்யும் சில உளவுத்துறை அதிகாரிகளும் ஆஜராகியிருந்தனர். விழாவின் ஒவ்வொரு அசைவையும் விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் தவறாமல் நோட்ஸ் எடுத்துக் கொண்டனர். எந்தெந்த மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள் வந்திருக்கிறார்கள். யார், யார் எங்கெங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்கிற வரைக்கும் நுணுக்கமாக தகவல்களைச் சேகரித்துக் கொண்டனர்.

* மாநாடு எப்போது?

“நீங்களெல்லாம் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாநாட்டு தேதியை விரைவில் அறிவிப்பேன்” என விஜய் பேசியிருந்தார். நாம் விசாரித்த வரைக்கும் விக்கிரவாண்டியைத்தான் மாநாடுக்கான லொகேஷனாக லாக் செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 22 அல்லது 25 இந்த இரண்டு தேதிகளில் ஒன்றில் மாநாட்டை நடத்திவிட வேண்டும் என விஜய் உறுதியாக இருக்கிறாராம்.

விஜய் – புஸ்ஸி ஆனந்த்

* தைரியப்படுத்திய விஜய்:

கொள்கைப் பரப்பு இணைச் செயலாளரான தாஹிராதான் விழாவில் நன்றியுரை கூறியிருந்தார். ஏற்கெனவே தயார்ப்படுத்தப்பட்டிருந்த உரைதான் எனினும் விழாவின் படோபடத்தைப் பார்த்து தாஹிரா கொஞ்சம் தடுமாறிப்போனார். வார்த்தை தடுமாறியது. முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜய், “பயப்படாம தைரியமா பேசுங்க!” என்பது போல முக அசைவிலேயே சைகைக்காட்டி அவரை ஊக்கப்படுத்தியிருந்தார்.

* கண்ணீர்விட்ட புஸ்ஸி ஆனந்த்:

த.வெ.கவின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த கட்சி பாடல் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் விஜய்யின் அருகே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார். விஜய்யும் ரொம்பவே சீரியஸாக அனைவரின் ரியாக்சன்களையும் உள்வாங்கிக் கொண்டிருந்தார்.