ஜெய்ப்பூரிலிருந்து ரயிலில் வந்த 1,600 கிலோ சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை, தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்தனர். முன்னதாக, ஜெய்ப்பூரிலிருந்து மதுரை நோக்கி செல்லும் ரயிலில், வெட்டி நான்கைந்து நாள்களான ஆட்டிறைச்சி சுகாதாரமற்ற முறையில் கொண்டுசெல்லப்படுவதாகவும், சென்னையில் பெரிய ஹோட்டல்களுக்கு அவை செல்லப்போவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி, நேற்று எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழு, 26 பெட்டிகளில் சுகாதாரமற்ற கொண்டுவரப்பட்ட ஆட்டிறைச்சியைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இது குறித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை சதீஷ்குமார், “ஆட்டிறைச்சி இருந்த 26 பெட்டிகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ரயில் புறப்பட்டதால் மீதமிருக்கும் பெட்டிகளைப் பறிமுதல் செய்யமுடியவில்லை. இருப்பினும், மற்ற மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து, மீதமிருக்கும் பெட்டிகளைப் பறிமுதல் செய்யுமாறு கூறியிருக்கிறோம். இறைச்சி வெட்டப்பட்ட நாளுக்குள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், இந்த 1,600 கிலோ இறைச்சி வெட்டப்பட்டு ஐந்து நாள்கள் ஆகிறது. இவ்வாறு கொண்டுசெல்லப்படும், ஆட்டிறைச்சி பெட்டிகள் கால்நடை மருத்துவரின் சான்றிதழோடு சீல் வைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இவற்றில் கால்நடை மருத்துவரின் சீல் மற்றும் சான்றிதழ் எதுவும் இல்லை. இந்த இறைச்சியை ஆராய்ச்சிக்கு அனுப்பியிருக்கிறோம். ஓரிரு நாள்களில் முடிவுகள் கிடைத்துவிடும். மேலும், இந்த இறைச்சியை முறையாக அப்புறப்படுத்தச் சென்னை மாநகராட்சியிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.