தமிழ்நாட்டில் மதுரை ஒரு மாபெரும் சுற்றுலாத் தளமாக உள்ள நிலையில், பெரும்பாலானோர் மதுரையைக் காண தினசரி வருகின்றனர். அனைத்து இடங்களிலும் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்கு மதுரையில் இருக்கக்கூடிய இடங்கள் தெரியவில்லை. முக்கியமான, பிரபலமான இடங்களின் விவரங்கள் (திறக்கும் நேரம், இடம்) கூட தெரியாமல் தவிக்கின்றனர்.
அதனால் மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை புதிதாக “மதுரை டூரிஸம் பாஸ்போர்ட்” என புகைப்படங்கள் மற்றும் முழுமையான விவரங்களுடன் 33 பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய புத்தகத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. மதுரையில் உள்ள புகழ்பெற்ற 30 முக்கியமான இடங்களுக்குச் செல்லும் வழி விவரங்கள் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் மிகவும் புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், தெப்பக்குளம், காந்தி மியூசியம், அழகர் கோவில், சமணர் மலை போன்ற முக்கியமான இடங்கள் முகவரி மற்றும் புகைப்படங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சிறப்பு அம்சங்களாக மதுரையின் பிரபலமான பொருட்கள் ( மல்லிகைப்பூ, ஜிகர்தண்டா, சுங்கடி சேலைகள், கைவினைப் பொருட்கள்), நிகழ்ச்சிகள் ( ஜல்லிக்கட்டு, ஆடுதல், பொங்கல்), திருவிழாக்கள் (சித்திரை திருவிழா, புட்டு திருவிழா, ஆவணி மூல விழா, படகு விழா), சிறப்புகள், உணவகங்கள் ( ஐயப்பன், ஜெயராம் பேக்கரி, மார்டன் உணவகம், அருளானந்தம், கோனார் மெஸ், முருகன் இட்லி கடை) , தங்கும் விடுதிகள் ( கோர்ட் யார்டு, ஹெரிடேஜ், ஜெர்மானஸ், பார்க் பிளாசா, ராயல் கோர்ட்,) தொலைப்பேசி எண்ணுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் வாங்க வேண்டியவை (சுங்கடி சேலைகள், மல்லிகை பூ, துணி மற்றும் அணிகலன்கள், கொலு பொம்மைகள், பித்தளை பொருட்கள்) போன்ற அனைத்து விதமான விஷயங்களும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
முதல்முறையாக மதுரையைச் சுற்றிப் பார்க்கச் செல்பவர்களுக்கு இந்த கையேடு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்!