மோடி 3.0-ல் யூ-டர்ன்: `Lateral Entry-ஆல் பாஜகவுக்கு ஏற்பட்ட டேமேஜுக்கு பின்னால்..?!

மத்திய அரசின் உயர் பதவிகளில் தனியார் துறை நிபுணர்களை ‘லேட்டரல் என்ட்ரி’ முறை மூலம் நேரடியாக நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மட்டுமன்றி, கூட்டணிக் கட்சியிலிருந்தும் எதிர்ப்பு வந்ததால், இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

யுபிஎஸ்சி

மத்திய அமைச்சகங்களில் காலியாக இருக்கும் 10 இணைச்செயலாளர்கள், 35 இயக்குநர்கள், துணைச்செயலாளர்கள் என மொத்தம் 45 பணிகளுக்கு ஒப்பந்த முறையில் நேரடி பணி நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிக்கையை ஆகஸ்ட் 17-ம் தேதி யு.பி.எஸ்.சி வெளியிட்டது. அதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

‘இது, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி சமூகத்தினரின் வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கும் செயல்’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். மேலும் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த லேட்டரல் என்ட்ரி நியமனத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, யு.பி.எஸ்.சி-யின் விளம்பர அறிவிக்கை ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி

இது, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி அரசுக்கான நிர்ப்பந்தங்களையும், எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களையும் இப்போதுதான் மோடி அரசு உணரத் தொடங்கியிருக்கிறது என்றும் தெரிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் இருந்ததால், தான் விரும்பிய சட்டங்களையும், திட்டங்களையும் விரும்பியபடி மோடி அரசு நிறைவேற்றிவந்தது. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்திருக்கிறது. ஆனாலும், முன்பு போலவே தான் விரும்பும் சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு மத்திய பா.ஜ.க அரசு இப்போதும் முனைப்பு காட்டுகிறது.

பிரதமர் மோடி

ஆனால், மக்களவை எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பதாலும், மாநிலங்களவையில் பா.ஜ.க-வின் பலம் முன்பைவிட குறைந்திருப்பதாலும், முன்பு போல பா.ஜ.க அரசால் தான் விரும்பிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் இருக்கிறது. அந்தச் சிக்கலை, ‘லேட்டரல் என்ட்ரி’ விவகாரத்தில் எழுந்த எதிர்ப்பிலிருந்து மோடி அரசு புரிந்துகொண்டிருப்பது தெரிகிறது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியதிகாரத்தில் இருக்கும் நிலையில், அரசு கொண்டுவரும் திட்டங்கள் குறித்து தங்களுடன் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட்டணிக் கட்சிகளிடம் இருக்கிறது. ஆனால், லேட்டரல் என்ட்ரி முறையைக் கொண்டுவருவது குறித்து ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை எதுவும் நடத்தப்படவில்லை என்று தெரிகிறது. அதனால்தான், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் இதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

சிராக் பாஸ்வான்

‘லேட்டரல் என்ட்ரி முறையால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி சமூகத்தினருக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது’ என்று காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரும் அதே அச்சத்தை வெளிப்படுத்தினார்கள்.

இப்போது, லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனத்துக்கான அறிவிப்பாணையை எதிர்ப்பின் காரணமாகத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியும்கூட, உடனடியாக அந்தச் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு வாபஸ் பெறவில்லை.

மோடி

ஆனால், அப்படியான போராட்டங்கள் எதுவும் இல்லாமலேயே, லேட்டரி என்ட்ரி தொடர்பான விளம்பர அறிவிப்பாணையை மோடி அரசு வாபஸ் பெற்றிருக்கிறது.

“கூட்டணி ஆட்சியின் தாக்கம் இதுதான்… இது தொடர்ந்து நீடிக்கும். பா.ஜ.க-வின் `தன்னிச்சையாக’ முடிவெடுக்கும் போக்கிற்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல… என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளுமே முட்டுக்கட்டையாக இருக்கும். எனவே, இனி எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும், பா.ஜ.க ஒரு முறைக்கு நான்கு முறை யோசிக்க வேண்டியிருக்கும்” என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88