`கலைஞரின் சித்தாந்தத்தை அண்ணாமலை இப்போது ஏற்றுக்கொண்டாரா?’ – கேட்கிறார் ஆர்.பி.உதயகுமார்!

“நாங்களும் தனி நபரை தாக்க ஆரம்பித்தால், உங்களால் தாங்க முடியாது, பா.ஜ.க தொண்டர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லாதீர்கள்…” என்று அண்ணாமலை குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் கடுமையாகப் பேசியுள்ளார்.

நிகழ்ச்சியில்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசியவர், “இந்தி ஒழிக என்று வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட கருணாநிதிக்கு, இந்தியில் நாணயத்தை வெளியிட்டுள்ளார்களே என்று கேட்டதற்கு, தனி நபர் தாக்குதலை ஸ்டாலின் செய்கிறார். அதேபோல தி.மு.க-வை அழிக்க வந்த கிருஷ்ண பரமாத்மா என்று வீர வசனம் பேசிய அண்ணாமலை, கருணாநிதி நினைவிடத்தில் வணங்கிச் சென்றுள்ளார்.

ஆனால், எம்.ஜி.ஆர் புகழை எடப்பாடி பழனிசாமி முழுமையாக கொண்டு சேர்க்கவில்லையென்று அபாண்டமாக அண்ணாமலை பழி சுமத்துகிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக எடப்பாடியார் நடத்தினார். சென்னை ரயில் நிலையத்திற்கும், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கும் எம்.ஜி.ஆர் பெயரை வைத்தார். தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் சிலையை நிறுவினார், நினைவிடத்தை புதுப்பித்தார்.

ஆர்.பி.உதயகுமார், அண்ணாமலை

அன்பழகன் வழக்கு தொடுத்தபோதிலும் அதையெல்லாம் முறியடித்து சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை வைத்தார். மெரினாவில் அம்மாவின் மணிமண்டபத்தை அமைத்தார். இதற்கு எதிராக வழக்கு போட்ட தி.மு.க-வினர், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க வேண்டுமென்பதால் பின்பு வாபஸ் வாங்கினார்கள்.

அண்ணாமலை பா.ஜ.க தலைவரான பின்பு தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என விமர்சிக்காத தலைவர்கள் யாரும் இல்லை. இப்போது கலைஞரின் சித்தாந்தத்தை அவர் ஏற்றுக்கொண்டாரா? மூத்தவரை வணங்குவதில் தவறில்லை. ஆனால், எத்தனை முறை இதற்கு முன்பாக கலைஞருடைய நினைவிடத்திற்கு நீங்கள் சென்றீர்கள்? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர், அம்மா ஆகியோர் நினைவிடத்தில் எத்தனை முறை வணங்கச் சென்றீர்கள்? மாற்றுக் கருத்துடைய மூத்தவர்களை வணங்குவதில் எந்த தவறும் இல்லை என்று கூறும் அண்ணாமலை, எல்லோரையும் வணங்கி விட்டு கருணாநிதியை வணங்கினால் ஒன்றுமில்லை. மூச்சு விடாமலும் சத்தமாகவும் பேசுவதால் அண்ணாமலை பேசுவது உண்மையாகாது.

பேசுவதைத் தவிர தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை என்ன செய்துள்ளார்? எட்டு முறை பிரதமரை தேர்தல் பிரசாரத்திற்காக அழைத்து வந்தவர், தமிழ்நாட்டின் வெள்ளச் சேதத்தை பார்வையிட அழைத்து வந்தாரா? வயநாடு நிலச்சரிவின் போது அங்குள்ள இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரதமரை அழைத்துச் சென்றார். ஆனால் நீங்கள் எப்போதாவது பிரதமரை அழைத்து வந்தீர்களா?

எடப்பாடியாரை கிணற்றுத் தவளை என்று விமர்சனம் செய்தீர்கள். எடப்பாடியார் வகிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி, நியமன பதவி அல்ல, ஒரு கோடியே 49 லட்சம் மக்கள் வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி. நீங்கள் பேசியதை பார்த்து இரண்டு கோடி தொண்டர்களும் கொதித்துப் போயுள்ளனர்.

நிகழ்ச்சியில்

நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது, ரயில்வே, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை, இதற்காக குரல் கொடுத்துள்ளீர்களா? ஏதோ நீங்கள் மட்டும்தான் பேசத் தெரிந்தவர் போலவும் தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போலவும் மூச்சு விடாமல் பேசினால்… நீங்கள் பேசுவதெல்லாம் உண்மை ஆகிவிடுமா? எங்களுக்கு அறிவுரை சொல்ல நீங்கள் யார்?

படித்தவர், பண்பாளர், மனிதநேயமிக்கவர் என்று நினைத்துதான் பா.ஜ.க தலைமை உங்களை நியமனம் செய்துள்ளது. ஒரு நியமன பதவியை தக்க வைப்பதற்காக எல்லா தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம்? எத்தனை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்கள், முதலில் நாவடக்கத்தை, பணிவை கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் கும்பிடுவதை நீங்கள் கேலி பேசுகிறீர்கள், நீங்கள் ஒரு முறை கும்பிடுகிறீர்கள், நாங்கள் எங்கள் தாய், தந்தை, தலைவர் கற்றுக் கொடுத்த பணிவு, பண்பாடு, நாகரிக அரசியல் அடிப்படையில் வணங்குகிறோம்

உங்கள் கட்சியை நீங்கள் வளர்ப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கென்று ஒரு வழிமுறை உண்டு. மத்திய அரசு உங்கள் கையில் உள்ளதை வைத்து தமிழகத்திற்கு நன்மை செய்ய வேண்டியது தானே.

அவரை ஒழிப்பேன், இவரை அழிப்பேன் என கூறும் நீங்கள் என்ன எமதர்மராஜாவா? நாங்கள் மதுரைத் தமிழில் வாயை திறந்தால் கூவமாக மாறிவிடும். பா.ஜ.க தொண்டர்களை தவறாக வழி நடத்த வேண்டாம். இது அறிவுரை அல்ல, வேண்டுகோள். தனிநபர் விமர்சனத்துக்கு அண்ணாமலை தயார் என்றால் நாங்களும் தயார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88