மெட்ராஸ் டே: சென்னை; அதன் வரலாற்றிலிருந்து சில அரிய காட்சிகள்! | Photo Essay #RESHARE

சின்னச் சின்ன சம்பவங்கள் சில நேரங்களில் ஒரு தேசத்தின் வரலாற்றையே மாற்றி எழுதிவிடுகின்றன. நமக்கும் அப்படித்தான் நேர்ந்தது. பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மிளகு வாங்கிச்சென்று விற்றது டச்சு வியாபாரிகள்தான். பதினாறாம் நூற்றாண்டில் திடீரென மிளகின் விலையை ஐந்து ஷில்லிங் உயர்த்தினர் டச்சு வியாபாரிகள். ‘இது கட்டுபடியாகாது’ என நினைத்த லண்டன் வணிகர்கள் 24 பேர் கூடி, இந்தியாவோடு நேரடி வர்த்தகம் செய்ய முடிவெடுத்தனர். 1600-ம் ஆண்டில் அவர்கள் ஆரம்பித்த கிழக்கிந்திய கம்பெனி, அதன்பின் இந்தியாவை அடிமைப்படுத்தியது வரலாறு. அந்தக் கம்பெனி உருவாக்கிய நவீன இந்திய நகரங்களில் பிரதானமானது சென்னை!

புனித ஜார்ஜ் கோட்டை

ஐரோப்பா கண்டத்திலிருந்து முதன்முதலில் இந்தியாவுக்கு வந்தவர்கள் போர்த்துகீசியர்களே! அதன்பிறகு ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், டேனிஷ்கள் ஆகியோர் வரிசைகட்டி வந்தார்கள். வியாபாரம் செய்ய வந்த அவர்களுக்குள் சண்டைகள் மூண்டன. தாக்குபிடிக்க முடியாமல் ஒவ்வொருவராக வெளியேற, இறுதியில் பிரான்ஸும், பிரிட்டனும் மோதின. அதில் பிரிட்டன் வெற்றிபெற்று நம்மை ஆளத் தொடங்கியது. இந்தப் பின்னணியில்தான் சென்னையும் தோன்றி வளர்ந்தது.

அர்மகாம் மற்றும் மசூலிப்பட்டினத்தின் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநியாக இருந்தவர் பிரான்சிஸ் டே. அந்த இடங்களைத் தவிர்த்து, நிறுவனத்துக்குப் பாதுகாப்பான இடம் வேண்டும் என்று தலைமையிடம் அவர் வேண்டுகோள் விடுக்க, புதிய இடத்தைத் தேர்வு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. இடத்தைத் தேடி அலைந்த டே, சென்னபட்டனம் என்று அழைக்கப்பட்ட நிலப்பகுதிக்கு வந்தார். இப்போது ஆந்திராவில் இருக்கும் சந்திரகிரியை ஆண்ட சந்திரகிரி அரசரின் கட்டுப்பாட்டில் சென்னபட்டனம் அப்போது இருந்தது; சென்னபட்டனத்தின் வரி வசூல் அதிகாரியாகப் பூந்தமல்லி நாயக்கர் வேங்கடகிரி இருந்தார். சந்திரகிரி அரசிடமிருந்து சென்னபட்டனத்தின் பகுதியை வாங்குவதற்காக வேங்கடகிரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் டே.

புனித ஜார்ஜ் கோட்டை

இன்றைக்குச் சந்திரகிரி ரயில்நிலையம் அருகே இருக்கும் ராஜமகால் அரண்மனையில் கி.பி. 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 அன்று நிகழ்ந்த இறுதிகட்டப் பேச்சுவார்த்தையின் முடிவில் சந்திரகிரி அரசரிடமிருந்து சென்னபட்டனத்தின் பகுதியை விலைக்கு வாங்கினார் பிரான்சிஸ் டே. ஆங்கிலேயர் வியாபாரம் செய்துகொள்ளவும், கடைகளும் கோட்டையும் கட்டிக் கொள்ளவும் இடம் விற்பனை செய்யப்பட்டது. சென்னை நகரம் பிறந்தது; ஒரு புதிய வரலாறு தொடங்கியது.

சந்திரகிரி அரசரிடமிருந்து பிரான்சிஸ் டே பெற்ற இடம், அளவில் சிறியதுதான். கூவம் நதி முகத்துவாரத்திலிருந்து கடற்கரை வரையிலும், துறைமுகம், காசிமேடு மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வட்டமாகவே இருந்தது. ஆங்கிலேயர்கள், உள்ளூர் மக்களைக் கவர்ந்திழுக்கும் சக்தியாக விளங்கினார்கள். அதனால், சென்னையில் மக்கள்தொகை அதிகரிக்கத் தொடங்கியது. சென்னை கையகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையின் மக்கள்தொகை 15 ஆயிரம். மக்கள்தொகை அதிகரித்துவிட்டதாகக் கருதி ஆங்கிலேயர் புனித ஜார்ஜ் கோட்டையை விரிவுபடுத்தினர்.

புனித ஜார்ஜ் கோட்டை

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கிய மதராசப்பட்டினம், ஓர் உலகப் பெருநகரமாக இன்றைக்குப் பரிணமித்திருக்கிறது. சென்னை மாநகரம் தன் 383-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், சில காட்சிகளின் வழியே இப்பெருநகரின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கலாம்!

* புனித ஜார்ஜ் கோட்டையும், தொலைதூரத்தில் புனித தாமஸ் மலை தேவாலயமும்… 1754-ம் ஆண்டு வரையப்பட்ட ஓவியம். 1639-ல் சென்னபட்டனத்தை வாங்கிய பிரிட்டிஷார், கடற்கரைக்கு எதிரில் தங்கள் கோட்டையை நிர்மாணித்தனர். அன்றைய மதிப்பில் 3,000 பிரிட்டிஷ் பவுண்ட் செலவில் கட்டப்பட்டு, 23 ஏப்ரல் 1644 அன்று புனித ஜார்ஜ் கோட்டையாக அது உருவெடுத்தது. இதை தொடர்ந்து, கோட்டைக்கு அருகிலேயே மக்கள் வசிப்பதற்காக ஜார்ஜ் டவுன் (வரலாற்று ரீதியாக கறுப்பர் நகரம்) உருவாக்கப்பட்டது. நாளடைவில், அருகிலிருக்கும் கிராமங்களையும் இணைத்துக் கொண்டு மெட்ராஸ் நகரம் வளரத் தொடங்கியது.

புனித ஜார்ஜ் கோட்டை

* ஆங்கிலேய குடியேற்றத்துக்குப் பிறகு, கோட்டைக்கு வெளியே இந்தியர்கள் வாழும் பகுதிகள் ‘பிளாக் டவுன்’ எனப்பட்டன. 1911-ல் இந்தியாவின் பேரரசராக ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டப்பட்ட பிறகு, முத்தியால்பேட்டையைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் அவர் பெயரால் ‘ஜார்ஜ் டவுன்’ என்று அழைக்கப்படலாயின. புகழ்பெற்ற பாரி கட்டிடம் இந்தப் பகுதியின் முனையில் அமைந்துள்ளதால், பாரிமுனை, முத்தியால்பேட்டையின் முக்கிய வீதியான பிராட்வேயின் பெயரால் ‘பிராட்வே’ என்று பல பெயர்களால் வழங்கப்படும் இந்தப் பகுதி, அதிகாரப்பூர்வமாக இப்போது என்.எஸ்.சி.போஸ் ரோடு என்று அழைக்கப்படுகிறது. கொத்தவால் சாவடி, சைனா பஜார் என எல்லாம் அமைந்திருக்கும் இந்த என்.எஸ்.சி. போஸ் ரோடு, கோட்டையையும் இந்தியர்கள் வசித்த பிளாக் டவுனையும் பிரித்த சாலையாக விளங்கியது.

என்.எஸ்.சி. போஸ் ரோடு

* கிழக்கிந்திய கம்பெனி காலகட்டத்திலும், காலனிய ஆட்சியிலும் ஏராளமான இந்தியர்கள் பிரிட்டிஷாருக்குப் பணிவிடை செய்வதற்கு ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் தனிப்பட்ட ஒவ்வொரு செயல்பாட்டுக்கும்கூட தனியாக ஒரு இந்தியர் பணிவிடை செய்யும் அளவுக்குத் தங்கள் வாழ்க்கையை முறையை பிரிட்டிஷார் அமைத்துக் கொண்டிருந்தனர். இங்கு ஒரு வெள்ளைக்கார துரை காலையில் பணிக்குத் தயாராக, பல இந்திய சேவகர்கள் ஊழியம் செய்ய வேண்டும். துரையின் நாய் சொகுசாக இருக்க, பச்சிளம் சிறுவன் பங்கா வீசுகிறான். கோட்டைக்குள் வசித்த பிரிட்டிஷாருக்குப் பெரும் கேளிக்கை, கழைக் கூத்தாடிகளை வரவழைத்து நிகழ்ச்சி நடத்தச் சொல்வதுதான்.

ஆங்கிலேயர்

* கிண்டி பூங்காவுக்கு நடுவே இருந்த மாளிகையை 1753-ம் ஆண்டு பிரிட்டிஷார் வாங்கினர். பின்னர் இது கவர்னர் இல்லமானது. அந்தக் காலகட்டத்தில் மிகவும் வசதி படைத்தவராக விளங்கிய ஆண்டோனியோ தெ மேதெய்ரோ என்பவருக்குச் சொந்தமான இந்த இல்லம், பிற்பாடு அரசாங்க இல்லத்தின் பிரதான கட்டடமானது. 1820-ல் கவர்னர் தாமஸ் மன்றோ அந்த அரசாங்க இல்லத்தை அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றினார். தாமஸ் மன்றோ இதில் வசித்த முதல் கவர்னர். இப்போத் பன்வாரிலால் புரோகித் வரை வசிக்கும் ராஜ்பவன் இதுதான்!

கிண்டி பூங்கா மாளிகை

* குளத்தில் அல்லி மலர்கள் அதிகம் இருந்த இடம் திருவல்லிக்கேணி. இங்குள்ள பார்த்தசாரதி கோயில் 8-ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி வைணவர்களின் 108 திவ்வியதேசங்களில் ஒன்று.

திருவல்லிக்கேணி

* ஆங்கிலேயர்களோடு சென்னைக்கு வந்தாலும், ஸ்காட்லாந்துக்காரர்கள் அவர்களிடமிருந்து விலகியே இருந்தார்கள். அதன்படி, ஸ்காட்டிஷ் வழிபாட்டுக்காக எழும்பூரில் புனித ஆண்ட்ரூஸ் தேவலாயம் கட்டப்பட்டது. 1818 ஏப்ரல் 6 அன்று தொடங்கப்பட்ட இந்தத் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள், 1821-ல் முடிக்கப்பட்டு வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது.

* 1876-ல் மெட்ராஸ் மாகாணத்தில் ‘தாது வருடப் பஞ்சம்’ ஏற்பட்டது. சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அப்போது மெட்ராஸ் மாகாண கவர்னராக இருந்த பக்கிங்ஹாம், உணவுக்கு வேலை என்ற திட்டத்தின் மூலம், கூவத்தையும் அடையாற்றையும் இணைக்கும் 8 கி.மீ கால்வாயைக் கட்டிமுடித்தார். அவர் பெயராலேயே ‘பக்கிங்ஹாம் கால்வாய்’ என்று அழைக்கப்படும் இந்தக் கால்வாயில், பொருள்களைச் சுமந்துவரும் படகுகள்.

பக்கிங்ஹாம் கால்வாய்

* தமிழும் ஆங்கிலமும் பேசத் தெரிந்தவர்களே, வரி வசூல் செய்யும் பில் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிநேரக் காட்சி இது.

பில் கலெக்டர்கள்

* 1870-களில் முதன்முதலாக சென்னையில் ஸ்டுடியோக்கள் அமைந்தன. பெண்கள் தலை முதல் பாதம் வரை நகைகள் அணிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

மெட்ராஸில் ஸ்டுடியோ

* இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்று, சென்னைப் பல்கலைக்கழகம். 1857-ல் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் தார்ப்பாய்ச்சு வேட்டியும், நீண்ட அங்கியும், பெரிய தலைப்பாகையும் அணிந்து நகரில் வலம்வந்திருக்கின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்

* சென்னையில் உயிரியல் பூங்காவுக்காக கேரளத்திலிருந்து கப்பலில் வந்த யானை, மிதவைகளில் ஏற்றி அழைத்துச் செல்லப்படுகிறது.

உயிரியல் பூங்கா

* அந்தக் கால ‘ஷெல்’ பெட்ரோல் பங்க். அடிபம்பு போல எகிறிக் குதித்து டியூபை இழுத்தால் பெட்ரோல் வெளியே வரும். சென்னைக்கு முதன்முதலில் 1930-களில் பெட்ரோல் பங்க் வந்தது. இன்றைக்கு அண்ணா சிலை அமைந்திருக்கும் இடத்தில் அப்போது அமைந்திருந்த ரவுண்டானாவுக்கு அருகில் இந்தப் பெட்ரோல் பங்க் அமைந்திருந்தது.

* வெள்ளையர்கள் மிரட்சியாகப் பார்த்த நம் தீமிதி விழா.

தீமிதி

* ஆற்காடு நவாபுக்காகக் கட்டப்பட்டது சேப்பாக்கம் அரண்மனை. பிரிட்டிஷாரிடம் அவர் வாங்கிய கடனைத் தராததால், மாளிகையை ஆங்கிலேயர் ஏலம்விட்டனர். சென்னை மாகாண அரசு அதை எடுத்துக் கொண்டது.sennai

இதுபோல மேலும் பல காட்சிகளின் தொகுப்பும், சென்னை வரலாறு குறித்த முழுமையான விளக்கமும் இந்த வீடியோவில்…