மகிழ்ச்சி… நெகிழ்ச்சி… உயர்ச்சி – சென்னையின் இரவு மனிதர்களின் கதைகள்!

‘சென்னையில இல்லாததே இல்லயாம்’, ‘ ரஜினி, கமல்னு சினிமாவுல பார்க்குற எல்லாரும் சென்னையில தான் இருக்காங்களாம்’, ‘சென்னைக்குப் போனா நம்ம தலைக்கு பக்கத்துலயே  ஃபிளைட் பறக்குமாம்’, பக்கத்து வீட்டு திவ்யா அக்கா சென்னையை எனக்கு இப்படித்தான் அறிமுகம் செய்தார். அப்போதே தீர்மானித்துவிட்டேன் ஒரு முறையாவது சென்னையைப் பார்த்து விட வேண்டும் என்று.

LIC Chennai

23 வயதில் வேலைக்காக சென்னை வரும் வாய்ப்புக் கிடைத்தது. பெரிய சாலைகள், பரபரப்பாக ஓடும் கால்கள், கூட்டம் வழிந்து ஒரு பக்கமாகத் தொங்கும் பேருந்துகள், நின்று பேசக்கூட மனமில்லாமல் செல்லும் மக்கள் என எல்லாம் சென்னை குறித்த அழகியல் பார்வையை உடைத்துப் போட்டன. கலர் கலராக டி – ஷர்ட் – ஜீன்ஸ் அணிந்து செல்லும் பெண்களுக்கு மத்தியில் பூப்போட்ட சுடிதாருடன், தேய்ந்த காலணிகளுடன், எண்ணெய் வாரித் தேய்த்த தலையுடன் நின்ற நான், முதல்முதலாக சமூகத்தில் இருந்து தனித்து நிற்பதாக உணர்ந்த நிமிடம் அது. அழுகை முட்டிக்கொண்டு வர தயக்கம், பயம், பதற்றம் எல்லாம் சேர்ந்து சென்னையில் வாழ முடியாது என்று குமுறிய நாள்கள் அவை. எனக்கு மட்டுமல்ல, இன்று பெரும்பாலும் சென்னையில் வசிப்பவர்களின் முதல் நாள் அல்லது முதல் வாரம் சென்னையில் இப்படித்தான் இருந்திருக்கும். ஆனால், அதன்பின் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் சென்னையைப் பழகி, நடந்து, ஓடி, ரசித்து இப்போது கொண்டாடத் தொடங்கிய சென்னை வாசிகளில் நானும் ஒருத்தி. என்னை மட்டுமல்ல வந்தவரை எல்லாம் அரவணைத்து, வழிகாட்டி, வாழவைத்து, பசியில்லாமல் பார்த்துக்கொள்வாள் இந்த சென்னை அன்னை.

ஓட்டமும், நடையுமாக, சிக்னல்களுக்கும், சிக்கல்களுக்கும் மத்தியில் பரபரப்பாக இயங்கும் சென்னை இரவு நேரத்தில் எப்படியிருக்கும் என்ற கேள்வி நீண்ட நாள்களாக  மனதில் ஓட, அப்படியொரு பயணம் அலுவலகத் தோழியுடன் தொடங்கியது.

இரவு 10 மணி…

வண்டியை தி.நகர் பக்கம் திருப்பினோம். பிளாட்ஃபார்ம் கடை ஒன்றில் ஒரு கணவன் தன் மனைவியின் மீது துணிகளை வைத்துப்பார்த்து, விலை விசாரித்துக் கொண்டிருந்தார். `ஏதாவது ஒண்ணு போதும், 250 ரூபானு குடுத்தா ரெண்டையும் எடுத்துக்கிறோம்’ என பேரம் பேசி அந்தக் கணவர் தன் மனைவிக்காக இரண்டு துணிகளையும் வாங்கி மனைவி கையில் கொடுத்த நிமிடம் அவ்வளவு அழகு. அதை ரசித்துக்கொண்டிருந்தபோதே,  தள்ளுவண்டி கடை தொடங்கி, பெரிய கடைகள் வரை தங்கள் பங்குக்கு கிலோ கணக்கில் குப்பைகளை தெருவில் குவித்துக்கொண்டு இருந்தார்கள்.

T Nagar

துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். துணிக்கடை, நகைக்கடைகளில் பணிபுரியும் யூனிஃபார்ம் அணிந்த பணியாளர்கள் ஒவ்வொருவராக கடையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தனர். விரும்பியதை வாங்கிச் சாப்பிடுவது, தங்கள் மேனேஜர்களுக்கு தெரியாமல் காதலை பரிமாறிக்கொள்வது என தங்கள் உலகத்தைப் புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள்.

கடலை வாங்கிக்கொண்டு எங்கள் பக்கத்தில் வந்து அமர்ந்தார் யூனிஃபார்ம் அணிந்த பெண் ஒருவர். லேசாக சிரித்தபடியே கடலையை நீட்டினார். `வேண்டாம்’ என மறுத்துவிட்டு, `எந்த ஊருக்கா?’, `எத்தன வருஷமா இங்க இருக்கீங்க?’ எனப் பேச்சு கொடுத்தோம். “நமக்கு தஞ்சாவூரு. 14 வயசுல வேலைக்கு வந்தேன். மூவாயிரம் ரூபா சம்பளம். நான் வேலைக்கு வரும்போது மூணு நேர சாப்பாடு, தங்கறதுக்கு இடமும் குடுத்தாங்க. ஊருல இருந்தப்போகூட பட்டினி கிடந்திருக்கேன். சென்னைக்கு வந்து ஒரு நாள்கூட பட்டினி கிடந்தது இல்ல. எங்க ஹாஸ்டல் இங்கதான் இருக்கு. ஒரே ரூம்ல 60 பேர் தங்கியிருக்கோம். காலையில் 9 மணிக்கு கடை வாசலுக்கு வந்துரணும். ராத்திரி 10.30 மணிக்கு விடுவாங்க. கால் கடுக்க நிக்கணும். பீரியட்ஸ்னா நாப்கின் மாத்தப்போனாகூட திட்டுவாங்க. இதெல்லாம்தான் கஷ்டம். மத்தபடி எல்லாம் ஓ.கே. இப்போ மாசம் 12,000 ரூபா சம்பளம் வாங்குறேன்” என்றவரின் முகத்தில் சின்ன பெருமிதம். `கொரோனா நேரத்துல வீட்டுச் செலவுக்கு வேற வழியில்லாம கொஞ்சம் கொஞ்சமா வாங்குன கடன் 30,000 ரூபா சேர்ந்துபோச்சு. அதுக்கு வட்டி இருபதாயிரம். அதை மட்டும் அடைச்சுட்டா போதும். அப்புறம், எனக்கு கல்யாணம். மாப்பிள்ளை பார்த்தாச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் அவரு என்ன `வேலைக்குப் போக வேண்டாம்’னு சொல்லிட்டாரு. ஜாலியா இருக்கும்ல” என்றவரின் முகத்தில் அரும்பிய வெட்கப் புன்னகை அவரின் வேதனைகளை மறைத்து, மறந்து நம்மையும் சிரிக்க வைத்தது.

காய்கறிக்கடை பாட்டி

இரவு 11 மணி…

தன் கடையை பேக் செய்து கொண்டிருந்த பாட்டி ஒருவரிடம் பேசினோம். “44 வருசமா இங்கதான் காய்கறிக்கடை வெச்சுருக்கேன். சொந்த ஊரு செஞ்சி. கல்யாணம் முடிஞ்ச அஞ்சு வருஷத்துல வீட்டுக்காரரு தவறிட்டாரு. கையில நாலு வயசு பையன். எங்க மாமியார்தான் என்னையும் என் பிள்ளையையும் பார்த்துக்கிட்டாங்க. அவங்க இந்தத் தெருவுல மளிகைக்கடை நடத்திட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஒத்தாசைக்கு வந்த நான் அப்படியே கடை போட ஆரம்பிச்சுட்டேன். அவங்க இருக்கும் போது என் வீட்டுக்காரரு இல்லாத குறை தெரியக்கூடாதுனு ராணி  மாதிரி பாத்துக்கிட்டாங்க. இந்தா போட்டுருக்கேன் பாரு இந்த ரெட்டவட மூக்குத்தி. இது எங்க மாமியாரோடதுதான். சாகுறப்போ குடுத்தாங்க. வீட்டுக் கஷ்டம்னு கையில, காதுல இருந்ததெல்லாம் வித்துட்டேன். ஆனா, சாப்பிட காசு இல்லாத நாளுலகூட இந்த மூக்குத்திய விக்கணும்னு நினைச்சது இல்ல…” என்ற பாட்டியிடம், `நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல பாட்டி?’ என்று கேட்டோம்.

படபடத்தவர், “ஐய்யோ அது தப்புமா…எங்க வீட்டுக்காரர் பேரு முருகன் சாமியோட இன்னொரு பேரு. அவரு பேரைகூட நான் சொல்ல மாட்டேன். 23 வயசுல தலையைத் தூக்கி கெட்டிக் கொண்டை போட ஆரம்பிச்சேன். பளிச்சுனு சேலை கட்டுனது இல்ல, எதுக்கும் ஆசைப்பட்டது இல்ல. புள்ள மட்டும் போதும்னு இருந்தேன். இப்பவும் சம்பாதிச்சு அவனுக்குத்தான் குடுக்குறேன். இந்தத் தெருவுல் இருக்குற எல்லாரும் என் மீது அம்புட்டு பாசம் காட்டுறாங்க. உலகமே கூட இருக்க மாதிரி இருக்கு’ என்ற பாட்டியிடம் `உங்கள ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?’ என்றதும் வெட்கம் மலர்ந்த அந்த முகம் அவ்வளவு அழகாக இருந்தது. `எப்ப இங்க வந்தாலும் வீரமணி பாட்டிக் கடை எங்க இருக்குன்னு கேட்டு வந்து என்னைப் பார்த்துட்டுப் போகணும்’ என கையில் ஒரு கேரட்டை திணித்தார். சென்னையில் புது உறவு கிடைத்த அற்புத தருணம் அது.

ஒரு டீயை குடித்து உற்சாகம் ஏற்றிக்கொண்டு எழும்பூர் பக்கம் பயணத்தைத் தொடர்ந்தோம்.

நள்ளிரவு 2 மணி…

குளிர்ந்த காற்று முகத்தில் பரவத்தொடங்கியது. ஹாரன் சத்தம் இல்லாத ரோடு, பளிச்சென ஒளிரும் மெர்க்குரி விளக்குகள் வெளிச்சத்தில் சென்னை இன்னும் ரம்மியமாக இருந்தது. அந்த இரவிலும் எழும்பூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் இருந்த பஞ்சர் கடை பரபரப்பாக இருந்தது. நாம் அருகில் சென்றதும்… ‘என்னம்மா பஞ்சர் ஒட்டணுமா?’ என வேகமாக எழுந்து வந்தார் உரிமையாளர் ரஸித். `இல்லண்ணே’ என்றதும் சென்னை ராத்திரி எப்படி இருக்குனு பார்க்க வந்தோம்’ என்றோம்…

“சென்னை எப்பவும் அழகுதான். நம்மையும் அழகா மாத்திரும்” என்று சிரித்தார். “எனக்கு வந்தவாசி. போட்டுருந்த டிரவுசரோட 40 வருசத்துக்கு முன்னாடி சென்னைக்கு ஓடி வந்துட்டேன். சினிமால நடிக்கணும்னு ஆசை. பத்துநாள் ஏ.வி.எம் ஸ்டிடூயோ வாசல்லயே நின்னேன். ஆசையைவிட பசி பெருசா இருந்துச்சு.

ரஸித்

ஊருக்குப் போக காசு இல்லாம பஞ்சர் ஒட்டுற கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். தொழிலைக் கத்துக்கிட்டேன். அப்புறம் தனியா பஞ்சர் கடை போட்டேன். ஒரு நாளைக்கு 500 ரூபா வாடகை. செலவுகள் போக 3,000 ரூபா சம்பாதிக்கிறேன். நான் பிறப்பால முஸ்லீம். ஆனா, இந்த பொன்னியம்மன் நம்ம வாழ்க்கையை மாத்திப்புடுச்சு. வாட்ச்மேன் மாதிரி அதை நான் பார்த்துக்குறேன். பதிலுக்கு அவளும் நம்மை நல்லபடியா பார்த்துக்கிறா. உழைப்பைத் தவிர வேற எதையும் யாரையும் நம்பலம்மா… களவு, பித்தலாட்டம்னு எதுவும் பண்ணல. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிறேன். பசங்களை இன்ஜினீயர் ஆக்கியிருக்கேன். உழைக்கத் தயாரா இருந்தா… வேலையும் கத்துக் கொடுத்து, வேலையும் கொடுக்கும் சென்னை  ஒரு சொர்க்கம்தாம்மா” என்று ரஸித் அண்ணன் கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்க புதுத்தெம்புடன் வால்டாக்ஸ் சாலை பக்கம் நகர்ந்தோம்.

மின் விளக்குகளின் வெளிச்சம் பெரிதும் இல்லாத அந்தப் பகுதியில் ஒரு கடையில் மட்டும் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. `சாப்பிட பிஸ்கட், டீயைத் தவிர எதுவும் இல்லம்மா’ என்றார் கடைக்காரர். “இந்த நேரம் யாருக்குண்ணே சமைக்கிறீங்க?” என்றதும், “இது காலை சாப்பாட்டுக்கும்மா” ஏழு மணி வரை வேலை இருந்துட்டே இருக்கும். 7.30 மணிக்கு சாப்பாடுக் கடையை திறந்துருவோம்” என்றவரிடம், “அண்ணே எந்த ஊரு நீங்க, சென்னைக்கு எப்ப வந்தீங்க?” என்றதும், “நமக்கு அரியலூர். 35 வருஷமா இந்தக் கடையில வேலை பார்க்குறேன். மாசம் 30,000 ரூபா சம்பளம்.” என்றவரை நிறுத்தி, “ஏண்ணே வேற வேலைக்குப் போகல… சொந்தமா கடை வைக்கல” என்று கேட்டோம்?, “எங்க அப்பாரு அரசாங்க வேலை பார்த்தவரும்மா…எனக்கு அவரோட வேலை கிடைச்சது… ராணுவத்துல. ஒரு பொண்ணை காதலிச்சேன்.

சென்னை

அந்தப் புள்ளைய பார்க்க முடியலைனு வேலையை விட்டுட்டேன்” என்று முகம் முழுவதும் சிரிப்புடன் சொன்னார். “ஆனா, அவங்களுக்கு வேற ஆளு கூட கல்யாணம் முடிஞ்சுருச்சு. திரும்பி போனப்போ எனக்கு வேலை போயிருச்சுனு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம சென்னை வந்தேன். ஆனா, குறை எதுவும் இல்லம்மா… ஒரு ஆள் சம்பளத்துல என் குடும்பமே அங்க நல்லா இருக்காங்க. சென்னைக்கு வராம போயிருந்தா வாழ்க்கையைத் தொலைச்சுருப்பேன்” என்று சென்னை மீதான தன் காதலை எந்தத் தயக்கமும் இல்லாமல் பகிர்ந்தவரிடன் பேசிவிட்டு 2.30 மணிக்கு அண்ணாநகரை நோக்கி நகர்ந்தோம். இரவு நேர பிரியாணி கடையில் போலீஸ் ரோந்துகளுக்கு மத்தியில் அவ்வளவு கூட்டம். அந்த பிரியாணி கடையில் ஏழை, பணக்காரர் என்று எந்தப் பாகுபாடும்  இல்லாமல் கையில் தட்டுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவு 3 மணி…

உறக்கம் கலைந்து கோயம்பேடு மார்க்கெட் முதலாளிகள் கையிலிருந்து தொழிலாளர்கள் கைக்கு மாறத் தொடங்கியிருந்த நேரம். லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கும் பணி துரிதமாகிக் கொண்டிருந்தது. முதலாளிகள் பெயர் எழுதப்பட்ட மூட்டைகளைப் பார்த்து இறக்கி, கடைகளில் அடுக்கிக் கொண்டிந்தார்கள் தொழிலாளர்கள். டீ கேன்களைச் சுமந்து கொண்டு சென்ற மொபைல் டீக்காரர்களை நிறுத்தி ஆங்காங்கே தொழிலாளர்கள் டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். பழங்கள் கிலோ என்ன விலை என்று கேட்டபோது, “மூணு மணிக்கு முதலாளிகள் கூடிப்பேசி விலை நிர்ணயம் பண்ணிட்டு வருவாங்க. அதுக்கு அப்புறம்தான் நாங்க விற்பனையைத் தொடங்குவோம்” என்று கறார் குரலில் பேசினார் கடைக்காரர். மூட்டை தூக்கிச் சென்று களைத்த தொழிலாளர் ஒருவரிடம் பேசினோம்.

கோயம்பேடு

“இன்னும் கொஞ்ச நேரத்துல கூட்டம் களைகட்டும். சென்னை முழுக்க இருந்த வியாபாரிங்க வந்து பொருள்கள் வாங்கிட்டுப் போவாங்க. எங்களுக்கு 10 மணி வரை வேலை இருக்கும். அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட். இங்க நாங்க 2,000 பேருக்கு மேல வேலை செய்யுறோம். ஒரு நாளைக்கு 1,500 ரூபா கூலி. இங்க ஒரு வீட்டுல நாங்க அஞ்சு பேரு ஒண்ணா தங்கியிருக்கோம். சொந்த ஊரு காஞ்சிபுரம். நினைச்சா கிளம்பி ஊருக்குப் போயிட்டு வருவேன். இன்னும் 5,000 பேர் வந்தாகூட இந்த மார்க்கெட்டுல வேலை இருக்கும்” என மீண்டும் மும்முரமானார்.

பகல் முழுவதும் பரபரப்பாக இருக்கும் சென்னை, இரவு நேரத்தில் கூடுதல் அழகாக மாறி  மனதில் நம்பிக்கையையும், அன்பையும், உழைப்பதற்கான புதுத்தெம்பையும் விதைத்தது.

அனைத்துக்கும் நன்றி சென்னை அன்னையே!