தன் வாழ்க்கை சிறப்பாகத் திகழக் காரணமான சிங்கப்பூர் முதலாளியைச் சொந்த ஊர் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து சீரும் சிறப்பாக வரவேற்பளித்தவரின் செயலை காளையார்கோயில் வட்டாரமே வியப்புடன் பார்க்கிறது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே வளையம்பட்டியைச் சேர்ந்த ஆனந்த், சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தன் இரு மகன்களுக்கு முதல் இறை ஏற்பு விழாவினை சொந்த ஊரான வளையம்பட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடத்தத் திட்டமிட்டார்.
அந்த நிகழ்ச்சிக்கு தன் வாழ்க்கை சிறப்பாக அமையக் காரணமான முதலாளி கென்ஜோங்-கை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அதற்கு கென்ஜோங் வரச் சம்மதித்ததால் உற்சாகமானார் ஆனந்த். அவரை வரவேற்கச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்.
நேற்று வளையம்பட்டியில் நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்த கென்ஜோங், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து வர, அவருக்கு நம்ம ஊர் ஸ்டைலில் பிளக்ஸ் வைத்து, போஸ்டர் ஒட்டி, பட்டாசு வெடித்து, செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோயிலில் பிரார்த்தனை முடிந்ததும் வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், ஆனந்த்தின் குழந்தைகளுடன் அமர்ந்த கென்ஜோங்கை ஊர்மக்கள் புடை சூழ ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்து வந்து உற்சாகப்படுத்தினார்கள் ஆனந்த்தின் குடும்பத்தினர். இந்த வரவேற்பு நிகழ்ச்சி கென்ஜோங்கை மட்டுமல்ல, காளையார்கோயில் வட்டார மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தியது.