புதுச்சேரி: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிதைத்து விட்டார்!’ – முதல்வர் ரங்கசாமியை சாடும் நாராயணசாமி

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் இயங்கிவரும் பிம்ஸ், ஸ்ரீ மணக்குள விநாயகர் மற்றும் வெங்கடேஸ்வரா உள்ளிட்ட மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில், புதுச்சேரி  மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் பெற வேண்டும் என்று, தேசிய மருத்துவக் கழகம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% அரசு ஒதுக்கீடு பெறப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆட்சியின்போது அந்த உத்தரவு போடப்படவில்லை. அதனால் நான் முதலமைச்சராக இருந்தபோது, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினேன்.

முதல்வர் ரங்கசாமி

அவர்கள் உடன்படாததால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50% இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று சட்டம் இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினோம். ஆனால் மத்திய அரசு அப்போது அதை கிடப்பில் போட்டு விட்டது. அதனால் அதை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது தேசிய மருத்துவ கழகம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீட்டை மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கிறது. அதனடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் 325 இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற்றிருக்க வேண்டும். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு அதை பெற தவறிவிட்டது. இந்த ஆண்டாவது தேசிய மருத்துவ கழகத்தின் உத்தரவை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

நான் முதலமைச்சராக இருந்த நேரத்தில் இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்காக ரூ.1,828 கோடி நிதியும் நிர்ணயிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், நகரப் பகுதிகளில் அகலமான சாலைகள், 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம், பாதாள சாக்கடை திட்டம், நகரப் பகுதிகளில் எலக்ட்ரிக் பேருந்துகள், நடைபாதைகள், அடுக்குமாடி பேருந்து நிறுத்தும் இடங்கள், புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானம், புனரமைக்கப்பட்ட பெரிய மார்க்கெட் மற்றும் புதிய பேருந்து நிலையம் போன்றவை அடங்கும். 64 திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநில அரசின் சார்பில் நிதி ஒதுக்கி, மத்திய அரசின் பங்களிப்புடன் அந்தத் திட்டங்களை செயல்படுத்தினோம். அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது.

நாராயணசாமி

முதல்வர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு ரூ.100 கோடி என்ற மாநில அரசின் நிதியை ரங்கசாமி அரசு ஒதுக்காததால், மத்திய அரசின் நிதி தடைபட்டது. அதனால் 64 பணிகளை 32 ஆகவும், ரூ.1,828 கோடி நிதியை ரூ.900 கோடியாகவும் குறைத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையே முதல்வர் ரங்கசாமி  அரசு சிதைத்துவிட்டது. பல முக்கிய திட்டங்கள் கைவிடப்பட்டன. மாநில அரசு நிதி ஒதுக்காத காரணத்தினால், 2025 மார்ச் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால் இந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுமா, கிடப்பில் போடப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறை என்று கூறி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை இந்த ஆட்சியாளர்கள் முடக்கப் பார்க்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88