`பா.ம.க-வை ஆதரித்தால் பட்டியலினச் சமூகத்தினரை முதல்வர் ஆக்குவோம்’ என்ற அன்புமணி ராமதாஸின் கருத்து?

திலகபாமா

திலகபாமா, பொருளாளர், பா.ம.க

“சமீபத்தில் தொல்.திருமாவளவன், ‘தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வராக முடியவில்லை’ என்று பேசியதன் வலியை உணர்ந்து உளப்பூர்வமாக பதில் சொல்லியிருக்கிறார் மருத்துவர் அன்புமணி. தலித்துகள், சிறுபான்மையினர் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் இயக்கம் பா.ம.க. மத்திய அரசில் பங்கேற்க எங்கள் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தபோது, முதலில் தலித் எழில்மலையைத்தான் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தோம். தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்களுக்கு இடையே இருக்கும் சாதிய முரணை இடித்து உடைக்கப் போராடிய கட்சி பா.ம.க. அந்தப் போராட்டக்களத்தில் வி.சி.க-வும் ஒருகாலத்தில் எங்களுடன் பயணித்தது. எங்கள் தலைவருக்கு ‘தமிழ்க்குடிதாங்கி’ என்ற பட்டத்தைக் கொடுத்ததே திருமாதான் என்பது வரலாறு. தருமபுரி கலவரம் நடைபெற்ற சமயத்தில், கருணாநிதியைச் சந்தித்த பிறகே திருமாவின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. உள்ளூர்ப் பிரச்னையாக முடியவேண்டிய ஒரு விவகாரம், அரசியல் லாபத்துக்காகப் பெரிதாக்கப்பட்டது. தி.மு.க-வின் சுயலாப அரசியலில் சிக்கி, இரண்டு சீட்டுகளுடன் திருமா நின்றுவிடக் கூடாது என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம். மற்றபடி பா.ம.க ஒருபோதும் சாதியைவைத்து அரசியல் செய்வதில்லை!”

வன்னி அரசு

வன்னி அரசு, துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க

“தமிழ்நாட்டிலுள்ள சமூக, சாதியச் சூழலில் ‘தலித் ஒருவர் முதல்வர் ஆக முடியாது’ என்ற யதார்த்தத்தையே எங்கள் தலைவர் சொன்னார். இதைச் சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்ளாமல், தி.மு.க – வி.சி.க இரண்டுக்குமிடையே முரண்பாடு இருப்பதுபோலவும், அதை மேலும் பெரிதாக்கிவிட முடியாதா என்ற ஏக்கத்துடனும் இப்படிக் கருத்து சொல்லியிருக்கிறார் அன்புமணி. தலித்துகளுக்கு எதிராக ஒரு சமூகத்தினரைக் கொம்பு சீவிவிட்டு, இப்போது வந்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதெல்லாம் வெறும் நடிப்பு மட்டுமே. தேர்தல் அரசியலில் ஒருகட்டத்துக்கு மேல் பா.ம.க-வால் முன்னேற முடியவில்லை என்பதால்தான், மீண்டும் தலித்துகளுக்கு எதிரான அரசியலைக் கையிலெடுத்தது பா.ம.க. தருமபுரி கலவரத்துக்கும்கூட பா.ம.க தூண்டிவிட்ட அந்தச் சாதிவெறிதான் காரணம். ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தருமபுரியில் சௌமியா அன்புமணியின் தோல்வி, அவர்களுக்கு ‘தலித் அல்லாமல் அரசியல் நடத்த முடியாது’ என்பதைப் புரியவைத்திருக்கிறது. எனவேதான், இதுநாள் வரை தான் சார்ந்திருக்கும் சமூகத்தினரையே ஏமாற்றிவந்த ராமதாஸ் குடும்பத்தினர், இப்போது தலித்துகளையும் ஏமாற்ற முயல்கிறார்கள். ‘தலித்தை முதல்வர் ஆக்குவோம்’ என்கிற அவர்களது நாடகத்தைத் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்!”